நடிப்புக்காகத் தேசிய விருது பெற்ற பிறகு, வணிகப் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், இணைகோடாக பெண் மையக் கதைகளிலும் நடித்துவருகிறார். இந்தித் திணிப்பை எதிர்க்கும் கதைக் களத்துடன் உருவாகியிருக்கும் ‘ரகு தாத்தா’ படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். ஒரு முழு நீள அரசியல் நகைச்சுவை படமாக உருவாகியிருக்கும் இதை, பிரபலமான ‘தி ஃபேமிலி மேன்’ இந்தி இணையத் தொடரின் திரைக்கதை எழுத்தாளரான சுமன் குமார் எழுதி, இயக்கியிருக்கிறார். இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த கீர்த்தி சுரேஷ், அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி:
10 ஆண்டுகள் திரைப் பயணம் எப்படி உணர்கிறீர்கள்? – பத்து வருடம் ஆகிவிட்டதா என்று பிரமிப்பாக இருக்கிறது. அதேநேரம் பொறுப்பு கூடிவிட்டதாக நினைக்கிறேன். கமர்ஷியம் படங்கள் – ‘ஆஃப் பீட்’ படங்கள் என இரண்டையும் பண்ணுவது நல்ல ‘பேலன்சிங்’ ஆக இருக்கிறது.தயாரிப்பில் இருக்கும் ‘கன்னி வெடி’, ‘ரிவால்வர் ரீட்டா’ வரை, ‘மகாநடி’ படத்துக்குப் பின் தானாகத் தேடி வந்து அமைந்த கதாபாத்திரங்கள். இனி நல்ல கதாபாத்திரங்களை நானும் தேடிச் செய்வது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன். அதற்காக, இதுவரை யாரும் தொடாத ‘ஸோன்’ எது என்று தேடத் தொடங்கிவிட்டேன்.
திரையுலகில் உங்களுக்குப் போட்டி நயன்தாராவா? – எனக்குப் போட்டி நான் மட்டும்தான். எனது ஒரு படத்தை இன்னொரு படம் தாண்டிச் செல்ல வேண்டும் என்று நினைப்பவள்.