ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியே டெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கட்டார் தலைநகரில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்த அமைப்பின் புதிய தலைவராக யஹ்யா சின்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017 தொடக்கம் ஹமாஸ் அமைப்பின் காசாவுக்கான தலைவராக இருந்து வரும் சின்வார், அந்த அமைப்பின் அரசியல் பிரிவுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பை வழிநடத்துவதற்கு அதன் தலைவர்களால் சின்வார் ஏகமனதாக நியமிக்கப்பட்டதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
காசாவில் போர் வெடிக்கக் காரணமான கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலுக்கு 61 வயதான சின்வார் மூளையாக செயற்பட்டதாக இஸ்ரேல் கருதுகிறது. இந்தத் தாக்குதலில் 1,100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு 200க்கும் அதிகமானோர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். டோஹாவில் இடம்பெற்று பேச்சுவார்த்தையில் ஹமாஸ் தலைமை பொறுப்புக்கு சின்வாருடன் பொது ஷூரா சபைக்கு தலைவராக உள்ள முஹமது ஹசன் தார்விஷ் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்ட நிலையிலேயே சின்வார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘தீர்வொன்றுக்காக நெகிழ்வுப் போக்குடன் செயற்பட்ட ஹனியேவை கொன்றார்கள். தற்போது அவர்கள் சின்வாரையும் இராணுவத் தலைமையையும் சமாளிக்க வேண்டும்’ என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹனியே ஹமாஸ் அமைப்புக்குள் உள்ள மிதவாதப் போக்குடையவராக பார்க்கப்படுவதோடு சின்வார் கடும்போக்காளராகவே கருதப்படுகிறார்.
சின்வாரின் நியமனம் தொடர்பில் வெள்ளை மாளிகை கருத்துக்கூற மறுத்துள்ளது. எனினும் அவரது தேர்வு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஹமாஸின் கடுமையான நிலைப்பாடு தொடரும் என்பதையும் உடன்பாடு ஒன்றை எட்டுவதை கடினமாக்கும் என்பதையும் காட்டுவதாக வொசிங்டனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு வருடத்தை நெருங்கும் காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இன்றி ஸ்தம்பித்துள்ளன. கணிசமான எண்ணிக்கையான பணயக்கைதிகள் தொடர்ந்து பலஸ்தீன போராளிகளின் பிடியில் உள்ளனர்.
எனினும் உடன்பாடு ஒன்றை எட்டுவதில் ஹமாஸ் அமைப்பு தொடர்ந்தும் ஈடுபாடு காட்டுவதாக குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பின் அதிகாரி ஒசாமா ஹம்தான், அந்தப் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் சின்வாரின் கீழ் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.