பிரிட்டனில் தொடர்ந்தும் முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்கள் நீடிப்பதோடு தஞ்சக் கோரிக்கை மையங்கள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு உதவும் சட்ட நிறுவனங்களை இலக்கு வைத்து தீவிர வலதுசாரி குழுக்கள் நாடெங்கும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு எதிராக பாசிச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர்.
வடமேற்கு பிரிட்டனில் மூன்று சிறுமிகள் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடந்த வார ஆரம்பம் தொடக்கம் வன்முறை நீடித்து வருகிறது. தாக்குதல் நடத்தியவர் பிரிட்டனில் குடியேறிய இஸ்லாமியவாதி என்று போலியான செய்தி பரவியதை அடுத்தே வன்முறை அதிகரித்தது.
கடந்த ஜூலை ஆரம்பத்தில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றியீட்டி பிரதமர் பதவியை ஏற்றிருக்கும் கீர் ஸ்டாமர் பெரும் சவாலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், கலகக்காரர்கள் நீண்ட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
‘எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எமது முதல் பணியாகும்’ என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சில நூறு கலகக்காரர்களைக் கொண்ட குழுக்கள் சிறு நகரங்கள் மற்றும் நகரங்களில் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதோடு ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கைச் சேர்ந்த தஞ்சக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ள ஹோட்டல் ஒன்றின் ஜன்னல்களை அடித்து உடைத்தனர். இதன்போது ‘அவர்களை வெளியேற்றுங்கள்’ என்று கோசம் எழுப்பிய கலகக்காரர்கள், படகுகளில் பிரிட்டனை நோக்கி வரும் தஞ்சக் கோரிக்கையாளர்களை குறிக்கும் வகையில் ‘படகுகளை நிறுத்து’ என்று கோசமிட்டனர்.
இவர்கள் கற்களை எறிந்து பள்ளிவாசல்களையும் தாக்கிய நிலையில் சிறுபான்மை இனத்தினர் உட்பட உள்ளூர் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எந்த ஒரு வன்முறையையும் கையாளுவதற்கு தயாராக 6000 சிறப்பு பொலிஸாரைக் கொண்ட ‘தயார்நிலை படை’ ஒன்றை அரசு அமைத்துள்ளது.
இந்த வன்முறைகள் தொடர்பில் இதுவரை 400 பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதோடு 100 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.