பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைவராக நோபல் விருது வென்றவரும், பதவி விலகிய பிரதமர் ஷெய் ஹசீனாவின் அரசியல் எதிரியுமான முஹமது யூனிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் ஆர்ப்பாட்டத்தை அடுத்து ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய நிலையிலேயே ஜனாதிபதி முஹமது ஷஹாபுத்தீன் நேற்று (07) இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரசியல் கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புகளுடனான பேச்சுவார்த்தைக்கு பின்னர் இடைக்கால அரசின் மற்ற உறுப்பினர்கள் தொடர்பான விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
83 வயதான நுண் நிதித் திட்டத்தின் முன்னோடியான யூனிஸை தலைவராக நியமிப்பதற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள் பரிந்துரைத்திருந்ததோடு அதற்கு யூனிஸ் இணக்கத்தை வெளியிட்டிருந்தார்.
ஹசீனா மீது கடும் விமர்சனங்களை வெளியிட்டு வந்த யூனிஸ், அவரது பதவி விலகல் நாட்டின் ‘இரண்டாவது விடுதலை தினம்’ என்று குறிப்பிட்டிருந்தார். யூனிஸை ஒருமுறை ஹசீனா, ‘இரத்தம் குடிப்பவர்’ என்று விமர்சித்திருந்தார்.
மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நுண்கடன் திட்டத்தின் முன்னோடியான பொருளாதார நிபுணர் மற்றும் வங்கியாளரான யூனிஸ் 2006 ஆம் ஆண்டு நோபல் விருதை வென்றார்.