பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இலங்கையின் கடைசி எதிர்பார்ப்பாக இருந்த டில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறினார்.
37 வயதான லேகம்கே பிரான்ஸ் தலைநகரில் இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 1.55இற்கு ஆரம்பமான பெண்களுக்கான ஈட்டி எறிதல் ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்கேற்றார். எனினும் அவரால் 56.66 மீற்றர் தூரமே வீச முடிந்தது.
இதன்மூலம் ஆரம்ப சுற்றின் ஏ குழுவில் அவர் கடைசி இடமான 16 ஆவது இடத்தையே பிடித்தார். இதில் தென்னாபிரிக்காவின் வான் டைக் 64.22 மீற்றர் தூரம் வீசி முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியதோடு இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்த அவுஸ்திரேலியாவின் எம். லிட்டில் (62.82 மீ.) மற்றும் கே. மிட்சல் (62.40 மீ.) ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
டில்ஹானி சீனாவின் ஹான்சு நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 61.57 மீற்றர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றதோடு தேசிய சாதனையையும் படைத்தார்.
முன்னதாக ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கையில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற அருண தர்ஷன, ஓடு பாதை விதியை மீறியதால் கடைசி நிமிடத்தில் ஒலிம்பிக் மைதானத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன, அந்தப் போட்டியை 44.75 விநாடிகளில் ஓடி முடித்து 5ஆவது இடத்தைப் பிடித்தார். அது அவரது சிறந்த காலமாகவும் இருந்தது.
எனினும் போட்டி விதிகளின்படி, போட்டி ஆரம்பமாகியதில் இருந்து 400 மீற்றர் முடியும் வரை 4ஆவது பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தாலும், அவர் 200 மீற்றர் ஓடும்போது 3ஆவது தடத்தில் கால் பதித்தது போட்டியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் தகுதி இழப்புச் செய்யப்பட்டார்.
இதன்படி ஒலிம்பிக் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற ஆறு வீர, வீராங்கனைகளையும் தமது போட்டிகளை நிறைவு செய்துள்ளனர்.