ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்படுவதற்கான திகதியும் தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகின்றது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வரையும் சுமார் 14 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
அதேநேரம் முன்னதாகவே தேர்தல் பிரசாரம் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. இப்பின்புலத்தில் அபேட்சகர்களும் அவர்கள் சார்ந்த கட்சிகளும் அக்கட்சிகளின் பிரதிநிதிகளும் தேர்தல் கால வாக்குறுதிகளை வழங்கும் நிலைமை ஆரம்பமாகியுள்ளது. குறிப்பாக எதிரணிக் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசக்கூடியனவாக உள்ளன. அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகள் தேர்தல் முடிவடைந்ததோடு காற்றில் பறந்து விடக்கூடியவை. அநேக வாக்குறுதிகள் நடைமுறைச் சாத்தியமற்றவை. இது பரவலாக அறியப்பட்ட உண்மை.
கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாடு, பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்தபடியே கட்டம் கட்டமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீளக்கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. அதன் ஊடாக பொருளாதாரம் நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் நாடும் மக்களும் முகம்கொடுத்த அசௌகரியங்களும் பாதிப்புக்களும் நீங்கியுள்ளமை இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
ஆனால் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகியிருந்த போது நாட்டின் தலைமையை ஏற்று பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முன்வராத எதிரணியினர், மக்கள் அன்றைய பொருளாதார நெருக்கடியில் நசுங்குண்டிருந்தை நேரில் கண்டு கூட மக்களின் நலன்களுக்காக தீர்மானங்களை எடுக்கத் தவறியவர்களாவர். இதனை மக்கள் மறந்தவர்கள் அல்லர்.
அன்று மக்களின் நல்களுக்காக தீர்மானங்களை எடுக்க முன்வராதவர்கள்தான் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் அபேட்சகர்களாகக் குதித்துள்ளனர். இந்த தேர்தல் காலத்தைப் பயன்படுத்தி இவர்கள் வழங்கிவரும் வாக்குறுதிகள் உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்படுமாயின் நாட்டையே ஆசியாவின் அதிசயமாக மாற்றிவிடலாம் என்பது தான் சமூகநல ஆர்வலர்களின் கருத்தாகும்.
அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தங்கள் கட்சி அபேட்சகர் ஆட்சிக்கு வந்தால், பெற்றோல் நிவாரணம் வழங்கும் திட்டம் குறித்து குறிப்பிட்டிருந்தார். அவரது உரையில், உதாரணமாக ஒரு லீற்றர் பெற்றோல் ரூ. 400.00 விற்கப்படுகிறது. இதனால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு கோடிக்கணக்கில் இலாபம் கிடைக்கிறது. அடுத்த குழுவினர் நாம் பெற்றோலை ரூ 200.00 வழங்குவோம் என்கின்றனர். ஆனால் நாம் அப்படி கூறவில்லை. பெற்றோல் லீற்றருக்கு ரூ. 400.00 படி விற்கப்படுகின்ற போதிலும் ரூ. 200.00 வுக்கு விற்கப்பட வேண்டியவரிடம் பெற்றோல் நிலையத்தில் ரூ 400.00 அறவிடப்பட்டாலும் டிஜிட்டல் தொழில்நுட்ப முறைமையில் ரூ 200.00 வை உடனடியாக அவருக்கு வங்கி கணக்கின் ஊடாக திருப்பி வழங்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் நடைமுறைச் சாத்தியம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஏனெனில் இந்நாட்டின் பெரும்பகுதியினர் இன்னும் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்குள் பிரவேசிக்காதவர்களாக உள்ளனர். நகர்ப்புறங்கள் தவிர்ந்த தூரப்பிரதேசங்களில் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடும் இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு இன்னும் வளர்ச்சி அடைந்தாக இல்லை. அத்தோடு டிஜிட்டல் தொழில்நுட்பம் குறித்த அறிவை அனேகர் பெற்றவர்களாகவும் இல்லை. அது மாத்திரமல்லாமல் வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் கூட இன்னும் நாட்டில் இருக்கவே செய்கின்றனர்.
நிலைமை இவ்வாறிருக்கையில் இது நடைமுறைச் சாத்தியமற்ற திட்டம். இது தேர்தல் காலம். அதனால் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப வாக்குறுதிகளை வழங்குகிறார்கள். தேர்தலின் பின்னர் வாக்குறுதிகளை வழங்கியவர்களுக்கு வாக்குறுதிகள் கூட நினைவிருக்காது என்பதுதான் மக்களின் கருத்தாக உள்ளது.
கடந்த பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில் அனுபவித்த கஷ்டங்களையும் துன்பங்களையும் மக்கள் இன்னும் மறந்து விடவில்லை. அந்த நெருக்கடியான சூழலில் கட்சியினதோ தமதோ நலன்களைக் கருத்தில் கொள்ளாது நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து தீர்மானங்களை எடுத்து செயற்பட்டவர் யார் என்பதையும் மக்கள் அறிவர். அந்த பொருளாதார வீழ்ச்சியின் அதள பாதாளத்தில் வீழ்ந்திருந்த மக்களை பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்து மீட்டெடுத்த பெருமை ஜனாதிபதிக்குரியது என்பதையும் மக்கள் மறந்துவிடல்லை.
அதனால் என்னதான் நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை வழங்கினாலும் அவ்வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாரில்லை என்பது தெளிவானது.