பாடசாலை மாணவர்கள் மத்தியில் நிதிசார் அறிவை வழங்கி, தகவலார்ந்த முதலீட்டு தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியவர்களாக கட்டியெழுப்பும் வகையில் றோயல் கல்லூரியின் Capital Market Club உடன் அமானா வங்கி அண்மையில் கைகோர்த்திருந்தது. அதன் பிரகாரம், கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது ‘Market Mastery’ பயிற்சிப்பட்டறைக்கு அனுசரணை வழங்கியிருந்தது. ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு, பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை ஆகியவற்றின் இணைந்த முயற்சியாக Capital Market Club அமைந்திருப்பதுடன், மாணவர்களுக்கு அத்தியாவசியமான நிதிசார் அறிவைப் பெற்றுக் கொடுக்க இவை கைகோர்த்துள்ளன. வினைத்திறனான நிதி முகாமைத்துவம் மற்றும் குறைந்த இடர் கொண்ட நிதிசார் செயன்முறைகள் பற்றிய பரிபூரண புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது.
Capital Market Club இன் அறிமுக நிகழ்வான Market Mastery அண்மையில் றோயல் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மேல் மாகாணத்தின் 18 பாடசாலைகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சிப் பட்டறையின் போது முன்னணி மூலதன சந்தையின் நிபுணர்கள் பெறுமதி வாய்ந்த அறிவையும், முக்கியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டதுடன், மாணவர்களுக்கு பங்குப் பரிவர்த்தனை, முதலீட்டு மூலோபாயங்கள், நிதிப் பகுப்பாய்வு மற்றும் ஆய்வு செயன்முறைகள் போன்றன தொடர்பான அறிமுகங்களையும் வழங்கியிருந்தனர். மேலும், பயிற்சிப் பட்டறைக்கு பங்களிப்பு வழங்கும் வகையில், அமானா வங்கியின் அறிவு சந்தைப்படுத்தல் மற்றும் நிதிசார் உள்ளடக்கத்துக்கான தலைமை அதிகாரி முவாத் முபாறக், முதலீடுகள் மற்றும் தனிப்பட்ட நிதி முகாமைத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவம் தொடர்பான விசேட விரிவுரையையும் வழங்கியிருந்தார். மேலும், மாணவர்களுக்கு வட்டிசாராத வங்கியியல் மாதிரி தொடர்பான அறிமுகத்தையும் பெற்றுக் கொடுத்திருந்தார். மத்திய வங்கியின் இலங்கை தேசிய நிதிசார் அறிவு வரைபு (2024-2028) என்பதன் அடிப்படையில், அமானா வங்கியின் அறிவு சந்தைப்படுத்தல் அலகினால், மாணவர்கள், பட்டம் பயிலுனர்கள், அரச ஊழியர்கள், பெண் தொழில் முயற்சியாளர்கள், வியாபார தனிநபர்கள் மற்றும் இலங்கையின் பல்வேறு பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவர்களுக்காக நிதிசார் அறிவூட்டும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்துக்கு அமானா வங்கி ஆதரவளித்திருந்தமை தொடர்பில் றோயல் கல்லூரியின் அதிபர் திலக் வத்துஹேவா குறிப்பிடுகையில், “பெறுமதி வாய்ந்த அனுசரணையாளராக எம்முடன் இணைந்து கொண்டு, Capital Market Club இன் அறிமுக Market Mastery நிகழ்வுக்கு ஆதரவளித்திருந்தமைக்காக அமானா வங்கிக்கு நன்றி தெரிவிக்கின்றோம். அதனூடாக, எமது மாணவர்களுக்கு மூலதன சந்தை தொடர்பில் சிறந்த அறிவைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும் என நம்புகின்றோம்.” என்றார்.
இந்த அனுசரணை தொடர்பில் அமானா வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் தலைமை அதிகாரி அசிம் ராலி கருத்துத் தெரிவிக்கையில், “றோயல் கல்லூரியின் Capital Market Club க்கு அனுசரணை வழங்குவதனூடாக, இலங்கையின் எதிர்கால தலைமைகளில் நாம் முதலீடு செய்து, அறிவார்ந்த நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான சாதனங்களையும் அறிவையும் பெற்றுக் கொடுக்கின்றோம். நிதிசார் ரீதியில் பொறுப்பு வாய்ந்த மற்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றகரமான குடிமக்களை கட்டியெழுப்புவதில் இது போன்ற திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அதனூடாக இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்லக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.