முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்து உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
2012ஆம் ஆண்டு வெலிக்கடையில் 8 கைதிகள் கொல்லப்பட்ட வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் எமில் ரஞ்சன் லமாஹேவாவை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 08 கைதிகளை சுட்டுக் கொன்றமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் பொலிஸ் பரிசோதர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவா, சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியான இந்திக சம்பத் ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த 2012 நவம்பர் 09 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலகத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். ஆயினும் 08 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே வழக்கைத் தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சிகள் கிடைத்தமை அடிப்படையில் சட்ட மாஅதிபரினால் குறித்த குற்றச்சாட்டுகள் முன்கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகிய பிரதிவாதிகளுக்கு எதிராக 33 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் 2022 ஜனவரி 12ஆம் திகதி முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.