காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மேற்குக் கரை மற்றும் லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஒக்டோர் 7 ஆம் திகதி ஆரம்பமான காசா போரை அடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நீடித்து வருவதோடு காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே கடந்த வாரம் ஈரான் தலைநகரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
இந்த படுகொலைக்கு எதிராக இஸ்ரேல் மீது பதிலடி கொடுப்பதில் ஈரான் உறுதியாக உள்ளதோடு ஈரான் ஆதரவுடைய லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்ந்தும் மோதல் நீடித்து வருகிறது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஹிஸ்புல்லா போராளிகளை இலக்கு வைத்து நகடியே பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. இதனை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையில் பரஸ்பரம் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் அது முழு அளவில் போர் ஒன்றாக வெடிக்கும் அச்சுறுத்தல் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளன. இதனையொட்டி அமெரிக்கா உட்பட பல நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளை லெபனானில் இருந்து உடன் வெளியேற கோரியிருப்பதோடு லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கான விமான சேவைகளும் அண்மைய தினங்களில் ரத்துச் செய்யப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மேற்கு ஈராக்கில் உள்ள அயின் அல் அஸாத் இராணுவத் தளத்தில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கத் துருப்புகள் மீது சரமாரி ரொக்கெட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
காசா போர் வெடித்த ஆரம்பத்தில் இவ்வாறான ரொக்கெட் தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்றபோதும் அண்மைய மாதங்களில் அது நிறுத்தப் பட்ட நிலையிலேயே மீண்டும் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலிய படையினரால் நேற்று நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு முன்னதாக கடந்த திங்கள் இரவு தொடக்கம் இடம்பெற்ற வன்முறைகளில் ஜோர்தான் எல்லைக்கு அருகில் மேலும் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேற்குக் கரையில் இரு வெவ்வேறு வான் தாக்குதல்களை நடத்தி போராளிகளை தாக்கியதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. ஜெனினில் இரு வாகனங்கள் மீது இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டதை பலஸ்தீன செம்பிறை சங்கம் உறுதி செய்துள்ளது.
ஜெனினில் இஸ்ரேலிய கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்கள் நுழைந்து சுற்றிவளைப்பு ஒன்றை நடத்திய நிலையிலேயே இந்த வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஈரானின் பதில் தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் இஸ்ரேல் பால முனைகளில் பாதுகாப்பு சவாலை எதிர்கொண்டிருப்பதோடு மேற்குக் கரையிலும் வன்முறை அதிகரித்துள்ளது.
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலஸ்தீன ஆயுதப் போராளிகள் இருந்தபோதும் பெரும்பாலானவர்கள் கற்களை எறிந்து எதிர்ப்பை வெளியிடும் இளைஞர்கள் மற்றும் எந்தத் தொடர்புமற்ற பொதுமக்களாவர்.
இதேநேரம் அங்கு பலஸ்தீனர்களின் தாக்குதல்களில் குறைந்தது 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜெரூசலம் புறநகரில் சோதனைச்சாவடி ஒன்றில் பஸ் ஒன்றை சோதித்துக் கொண்டிருந்தபோது பலஸ்தீனர் ஒருவர் நேற்று நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இஸ்ரேலிய பெண் எல்லை காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் போர் தொடுத்து இன்றுடன் (7) பத்து மாதங்களை எட்டும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற தாக்குதல்களில் 30 பேர் கொல்லப்பட்டு 66 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 39,653 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,535 பேர் காயமடைந்துள்ளனர்.