இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று (07) கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி சமநிலையில் முடிந்து இரண்டாவது போட்டி இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில் 27 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக முதலாவது தொடர் வெற்றியை எதிர்பார்த்தே இலங்கை அணி இன்று களமிறங்கவுள்ளது.
இரு தரப்பு ஒருநாள் தொடர் ஒன்றில் இலங்கை அணி கடைசியாக இந்தியாவை வென்றது 1997 ஆம் ஆண்டிலாகும். அப்போது அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியாவை 3–0 என முழுமையாக தோற்கடித்தது.
அது தொடக்கம் இலங்கை மற்றும் இந்திய அணிகள் 11 இரு தரப்பு ஒருநாள் தொடர்களில் ஆடியபோதும் இலங்கையால் ஒரு தொடரிலும் வெல்ல முடியாமல்போனது. இந்நிலையில் இந்திய அணிக்கு தொடர் வெற்றி ஒன்றை பெற முடியாத நிலையில் தொடர் தோல்வி ஒன்றை தவிர்க்கும் முயற்சியாகவே இன்று களமிறங்கவுள்ளது. ஆர். பிரேமதாச மைதானம் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் நிலையில் இந்திய அணி இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் தடுமாற்றம் கண்டு வருகிறது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இலங்கை அணி இரு விசேட சுழற்பந்து வீச்சாளர்களுடன் அணித் தலைவர் சரித் அசலங்க உட்பட மூன்று பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களுடனேயே களமிறங்கியது.
இதில் ஜெப்ரி வெண்டர்சே அபாரமாக செயற்பட்டு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சரித் அசலங்கவின் பந்துவிச்சு முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கைக்கு உதவியது.
இந்நிலையில் இன்றைய போட்டியிலும் இலங்கை எந்த மாற்றமும் செய்யாமல் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
மறுபுறம் வலுவான துடுப்பாட்ட வரிசையை கொண்டிருந்தபோதும் இந்திய அணி சுழற்பந்துக்கு உதவும் ஆடுகளத்தில் தனது ஆட்டத்தை பலப்படுத்த இன்று முயற்சிக்கும்.
பகலிரவு போட்டியாக இன்றைய ஆட்டம் பிற்பகல் 2.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.