சம்பள விடயத்தில் ஏமாற்றப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணத்தையாவது பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று(06) நடைபெற்ற மாத்தறை நில்வலா கங்கையை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டுள்ள உவர் நீர் தடுப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘மலையகத்தில் மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை தீர்வுகள் இன்றி உள்ளனர். பூனாகலை, பசறை, மடுல்சீமை உள்ளிட்ட பல இடங்களில் மண்சரிவால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் உத்தரவிட்டும் அரச அதிகாரிகள் அசமந்தப் போக்கிலேயே செயற்படுகின்றனர்.
அதேவேளை, சம்பள விடயத்தில் இலவு காத்த கிளி போல மக்கள் காத்திருக்கின்றனர். இந் நிலையில் மீண்டும் சம்பள நிர்ணய சபையின் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
நாட்டின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றாற்போன்று உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்க வேண்டும். பல அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட எமது சமூகத்திற்கு இடைக்கால நிவாரணத்தையாவது வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்திற்கு மலையக மக்கள் சார்பில் நான் ஆதரவு வழங்கியுள்ளேன். அவ்வாறு வாக்களித்து நான் பதுளை மாவட்டத்தில் பல கோடி ரூபா செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுகின்றேன். அத்துடன் நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
(லோரன்ஸ் செல்வநாயகம்)