இந்தியக் கடற்படைக்கென புதிதாக மேலும் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்வனவு செய்தற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் ஸ்கொர்பெய்ன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்வனவு செய்யப்படவிருக்கின்றன. பிரான்ஸ் கடற்படைக் குழுவின் வடிவமைப்புடன் பாரத் இலக்ட்ரோனிக் லிமிட்டட் மூலம் தயாரிக்கப்படும் இந்நீர்மூழ்கிக் கப்பல்கள் 60 சதவீதம் வரை உள்நாட்டு தொழில்நுட்பத்தையும் அறிவியலையும் உள்ளடக்கியதாக இருக்கும். அதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் இந்திய கடற்படை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவென வருகை தந்திருந்த பிரான்ஸ் கடற்படைக் குழுவின் நிறைவேற்று உப தலைவர் வின்சென்ட் மார்டினோட்-லாகார்டே ஏ.என்.ஐ. க்கு விஷேட பேட்டியொன்றை வழங்கியுள்ளார்.
அப்பேட்டியின் போது ‘இந்நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரஞ்சு வடிவமைப்புடன் தயாரிக்கப்படுகின்ற போதிலும் அதன் பிரதான பகுதி குறிப்பாக யுத்தத்திற்கான கட்டமைப்பு உள்நாட்டு தொழில்நுட்பத்தை கொண்டதாக பாரத் இலெக்ட்ரோனிக் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும்.
இது ஒரு தனித்துவமான திட்டமாக இருக்கும். உள்நாட்டு வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தின் அடிப்படையில் கடற்படையை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவது இந்திய கடற்படையின் நல்ல முயற்சியாகும். ஸ்கொர்பெய்ன் வடிவமைப்பானது நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய புதிய வடிவமாகவும் அதிசிறந்த போர்த்திறன்களை உள்ளடக்கியதாகவும் விளங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் கடற்படை குழுவின் பங்காண்மையைக் கொண்டிருக்கும் மசகான் கப்பல் கட்டும் தளத்தில் இம்மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களையும் தயாரிப்பதற்கு இந்திய கடற்படை பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. எனினும் இவ்வருட இறுதிக்குள் ஆறு படகுகளை பெற்றுக்கொள்ளவும் இக்கடற்படை எதிர்பார்த்துள்ளது.
இந்திய நீர்மூழ்கிக் கப்பல் படைப் பிரிவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இம்மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. புதிய 21 படகுகளையும் சுமார் ஆறு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும் உள்ளடக்கியதாக இப்படைப்பிரிவு உருவாக்கப்பட உள்ளது.