அம்மனுக்கு உரிய நாளான ஆடிப்பூரம் இன்றாகும். அம்பாளுக்கும் ஆண்டாளுக்கும் உரியது ஆடிப்பூரம் நாள். இன்றைய நாளில்தான் அம்பாள் பெண்மை அடைந்ததும், உமாமகேஸ்வரியாக அவதரித்ததும், ஆண்டாளாக அவதரித்ததுமாகும். இதனால்தான் அம்மன் ஆலயங்களில் சடங்குகள், சம்பிரதாயங்கள், விஷேட பூசைகள் நடைபெறுகின்றன.
இந்த நாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, குங்குமக் காப்பு, வளைகாப்பு, வளையல் அலங்காரம் ஆகியவை பக்தர்களால் நடத்தப்படுகின்றன.
ஆடிப்பூர தினத்தை வளைகாப்பு நாளாகக் கருதி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பெருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆடி மாதம் அம்பாளுக்குரிய ஐந்தாவது மாதம் என்பதால் வளைகாப்பு மாதமாக அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இன்று புதன் கிழமை அம்பாள் ஆலயங்களில் விசேட பூசை இடம்பெறுகின்றன.
திருமணம், குழந்தை வரம் மட்டுமன்றி, குடும்ப நலனுக்காகவும் பக்தர்கள் ஆடிப்பூர தினத்தில் வேண்டுதல் வைத்து வழிபடுகிறார்கள். இது ஆண்டாள் ஜெயந்தியாகவும் கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத்தில் வருகின்ற மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று ஆடிப்பூரம். இது அன்னை உமாதேவி மற்றும் ஆண்டாள் நாச்சியாரின் அவதாரத் திருநாளாகும். இந்த நாளில் அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும், நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரமும் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனால் இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்து பக்தர்கள் வழிபடும் வழக்கம் உள்ளது.
சில கோயில்களில் அம்மனுக்கு வளைகாப்பு திருவிழாவும் ஆடிப்பூரத்தன்று நடத்தப்படுவது வழக்கம்.இந்த ஆண்டில் ஓகஸ்ட் 6 ஆம் திகதி மாலை 06.42 மணி தொடங்கி, ஓகஸ்ட் 7 ஆம் திகதி இரவு 09.03 வரை பூரம் நட்சத்திரம் உள்ளது. இன்று புதன்கிழமை என்பதால் காலை 07.30 முதல் 9 மணி வரை எமகண்ட நேரமும், பகல் 12 முதல் 01.30 வரையிலான நேரத்தில் ராகு காலமும் உள்ளது. இதனால் இந்த நேரங்களைத் தவிர்த்து விட்டு அம்மனுக்குரிய வழிபாட்டினை செய்யாலாம்.
எனவே ஆடிப்பூர வழிபாட்டு நேரம் இன்று காலை -6 முதல் 07.15 வரை மற்றும் காலை 09.05 முதல் 10.20 வரை ஆகும்.
வி.ரி சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்