ந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை முன்னெடுக்கும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இது நாலா புறமும் கடலால் சூழப்பட்டுள்ள நாடான போதிலும் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்கு உகந்த சீதோஷண நிலையையும் மண்வளத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தென்னை, தேயிலை, இறப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்கள் செய்கை பண்ணப்படும் நாடாக விளங்குகிறது இலங்கை. இவற்றில் தேயிலையும் இறப்பரும் பிரித்தானியரால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெருந்தோட்ட பயிர்களாகும்.
தென்னை இந்நாட்டில் நீண்ட காலமாகக் காணப்படக்கூடிய ஒரு பெருந்தோட்டப் பயிராகும். இது இந்நாட்டு மக்களின் பொருளாதாரத்துடனும் சீவனோபாய வாழ்வாதாரத்துடனும் இந்து, பௌத்த வழிபாடுகளோடும் பின்னிப் பிணைந்த ஒரு பயிராக விளங்குகின்றது.
இந்நாட்டில் மன்னராட்சிக் காலம் முதலே இப்பயிர்ச்செய்கை ஊக்குவிப்பட்டு வருகின்றது. அத்தோடு மன்னர்களது காலம் முதல் இந்நாட்டு மக்களின் உணவோடு தேங்காய் இணைந்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. இவ்வாறு இந்நாட்டில் நீண்ட வரலாற்றை தென்னை கொண்டிருக்கிறது.
அந்த வகையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தென்னை காணப்படுகின்ற போதிலும் புத்தளம், குருநாகல், கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளட்டக்கிய பிராந்தியம் தெங்கு முக்கோண வலயமாக விளங்குகின்றது.
இது தேங்காய் அறுவடை அதிகளவில் கிடைக்கப்பெறும் பிராந்தியமாகத் திகழுகிறது.
தற்போது இந்நாட்டில் மூவாயிரம் மில்லியன் தேங்காய்கள் வருடமொன்றுக்கு அறுவடை செய்யப்படுகின்றன. அவற்றில் பெரும்பகுதி வீட்டுப் பானைக்காகவும் குறிப்பிடத்தக்களவில் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு சிறுதொகை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது. இவற்றின் ஊடாக அந்நியச் செலாவணியும் நாட்டுக்கு கிடைக்கப்பெறுக்கின்றன.
இதன் விளைவாக இந்நாட்டில் சிறிய, நடுத்தர மற்றும் பாரியளவிலான தெங்கு செய்கையாளர்கள் உள்ளனர். தெங்கு கைத்தொழில் துறையிலும் குறிப்பிடத்தளவிலானோர் தொழில் வாய்ப்புக்களை பெற்றுள்ளனர். அத்தோடு தேங்காய் உள்ளிட்ட பல்வேறு தெங்கு பொருட்களும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் ஊடாக நாடு அந்நிய செலாவணியையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.
ஆன போதிலும் நாட்டின் தெங்கு பயிர்ச்செய்கை பலவிதமான நோய்த்தாக்கங்களுக்கு அண்மைக் காலமாக முகம்கொடுத்துள்ளது. அவற்றில் வெள்ளை ஈ, சிவப்பு வண்டு, கறுப்பு வண்டு, வெலிகம தென்னை இலை நோய் ஆகியன குறிப்பிடத்தக்க நோய்களாக உள்ளன. இந்நோய்த் தாக்கம் பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபட்டதாக விளங்கிறது. அதனால் இந்நோய்த் தாக்கங்கள் தேங்காய் விளைச்சலிலும் அறுவடையிலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நோய்த் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்நாட்டின் தெங்கு செய்கை எதிர்நோக்கியுள்ள நோய்த் தாக்கங்கள் மற்றும் தெங்கு செய்கையாளர்களின் கோரிக்கைகள் என்பன குறித்து விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சருமான மஹிந்த அமரவீர கவனம் செலுத்தியுள்ளார்.
அந்த அடிப்படையில் தெங்கு செய்கையாளர்கள் முகம்கொடுத்துள்ள தெங்கு நோய்த் தாக்கங்களுககு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுத்துள்ளது. இந்நடவடிக்கையின் கீழ் 1916 என்ற உடனடி தொலைபேசி இலக்கமும் coconut app என்ற செயலியும் நேற்று முன்தினம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த உடனடி தொலைபெசி இலக்கம் மற்றும் செயலி ஊடாக தெங்கு செய்கையாளர்கள் முகம்கொடுத்துள்ள நோய்த் தாக்கப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலான ஆலோசனைகளும் அறிவுரைகளும் மூன்று மொழிகளிலும் பெற்றுக் கொடுக்கப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகளின் ஊடாக நாட்டின் தெங்கு செய்கை முகம்கொடுத்துள்ள நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்’ என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விஷேட வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்த அமைச்சர் மஹிந்த அமரவீர, தெங்கு செய்கை முகம்கொடுத்துள்ள நோய்த்தாக்கங்களை இந்நடவடிக்கையின் ஊடாகக் கட்டுப்படுத்தவும் தேங்காய் அறுவடையை 3,600 மில்லியன்களாக அதிகரிக்கவும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்
ஆகவே உள்நாட்டு தெங்கு செய்கை முகம்கொடுத்துள்ள நோய்த்தாக்கங்களை கட்டுப்படுத்தவென வழங்கப்படும் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அது தெங்கு விளைச்சலையும் அறுவடையையும் அதிகரிக்க வழிவகை செய்யும். அதற்கு ஏற்ப செயற்படுவது தெங்கு செய்கையாளர்களின் பொறுப்பாகும்.