ஜனாதிபதி எந்த கட்சியையும் பிளவு படுத்தவில்லை. கட்சிகள் பிளவுபட்டிருந்த காலகட்டத்திலேயே ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றிருந்தார். தற்போதும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ளாரென, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
இதுபற்றி தொடர்ந்து தெரிவித்த அவர்:
நாட்டில் கடந்த வருடங்களில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடியால், இளைஞர் சமூகம் முழுமையாக வீழ்ச்சியடைந்தது. சில இளைஞர்கள் நாட்டை விட்டுச் சென்றனர். இந்நிலை தொடர்ந்து அவ்வாறு இருக்க முடியாது. நாங்கள் இந்த நாட்டை புதிய திசைக்கு கொண்டு செல்ல வேண்டும்.இதற்கு இளைஞர்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் தேவையாகும். நாடு வங்குரோத்தடைந்து இரண்டு வருட காலத்துக்குள் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்த 42 வருட அரசியல் அனுபவமே காரணமாகும். என்றாலும் இன்னும் அந்த பணி முடிவடையவில்லை. இது புரியாமல் அரசியல்வாதிகள் வழமையான போக்கில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு மீண்டும் நாட்டு மக்களை கஷ்டத்தில் வீழ்த்தினால், மிகப்பெரிய ஆபத்தான நிலையே ஏற்படும்.
அதிதீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வாட்டுக்கு கொண்டு வந்த நோயாளியை தற்போது வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது. என்றாலும் அரசியல்வாதிகள் தொடர்ந்து பொய்ப்பிரசாரம் மேற்கொண்டு, நோயாளியை மேலும் அழுத்தத்திற்கு உட்படுத்தினால், நோயாளியை மயானத்துக்கே அனுப்பவேண்டி வரும். அதனால் நாட்டு மக்கள் இதுதொடர்பாக மிகவும் அவதானமாக புரிந்துகொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் அரசியல் கட்சிகள் இந்த நாட்டை எந்த திசையை நோக்கி கொண்டு செல்கிறது என்பதை தொடர்பில் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
அரசியல் கட்சிகள் நினைத்த பிரகாரம் பொய் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டி இருக்கிறது. நாட்டினதும் பொது மக்களினதும் பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகள் மற்றும் அதன் உறுப்பினர்கள் சம்பிரதாய அரசியலில் இருந்து விடுபட்டு செயற்பட வேண்டும்.