சிங்கள, தமிழ் மாணவர்களுக்கிடையிலான நல்லிணக்க மொழிப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார நிலையத்தில் நடத்தப்பட்டிருந்தது.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதியின் கருத்து மற்றும் வழிகாட்டுதலின் கீழ், படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பரிசளிப்பு விழா கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ குலதுங்க, ஆர்.டபிள்யூ.பீ.ஆர்.எஸ்.பீ.வீ.எஸ்.வீ.யூ.எஸ்.பீ.பீ.எஸ்.சீ கலந்துகொண்டார்.
இந்த மொழிப் பாடநெறியானது, 2024 ஜனவரி 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மாணவர்களின் சிங்கள மொழித் திறனையும், சிங்கள மாணவர்களின் தமிழ் மொழித் திறனையும் மேம்படுத்துவதன் மூலம், தேசிய, மத மற்றும் கலாசார நல்லிணக்கத்தை மேம்படுத்துவதும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதே இந்த பாடநெறியின் முக்கிய நோக்கமாகும்.
மட்/இராமகிருஷ்ணா வித்தியாலயம் மற்றும் மட்/முதலிக்குடா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 115 தமிழ் மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், மெதடிஸ்ட் திருச்சபையின் வண. எபினேசர் ஜோசப் ஆண்டகை, கொக்கட்டிச்சோலை கோட்ட கல்விப் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.