மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகப்பேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனாவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று( 5) உத்தரவிட்டுள்ளார்.
நேற்றைய தினம் நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்ச்சுனா வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் வைத்தியசாலையினுள் அனுமதி இன்றி வைத்தியருடன் நுழைந்து காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது வைத்தியரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
(மன்னார் குறூப் நிருபர்)