எந்தவொரு செயற்பாட்டிலும் தொடர்ந்து முயற்சி செய்தால் அது திருவினையாக்கும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
வட மாகாண கரப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய மன்னார் துள்ளுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மன்னார் துள்ளுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் கரப்பந்தாட்டப் போட்டியில் ஒரு சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.
இந்த கரப்பந்தாட்டம் என்பது இந்த கிராமத்தின் ஒரு பரம்பரை விளையாட்டாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை இன்றைய இந்த மாணவர்கள் எண்பித்துக் காட்டியுள்ளனர். எந்த விடயமாக இருந்தாலும் ஆரம்பத்தில் மேற்கொள்ளும்போது கடினமானதாகவே காணப்படும்.
ஆனால் இதை நாம் தொடர்ச்சியாக, பயிற்சியாக முன்னெடுக்கும் போது அது இலகுவாக அமையும். இதைத்தான் இந்த மாணவர்களும் தங்களை ஈடுபடுத்தியுள்ளனர்.
இந்த விளையாட்டை நோக்கும்போது மாணவர் அணி படிப்படியாக முன்னேற்றமடைந்திருப்பதும் இங்கு நோக்கக்கூடியதாகவிருக்கின்றது.
அதாவது இந்த அணியானது கடந்த இரண்டு வருட காலத்தில் மூன்றாவது பின்னர் இரண்டாவது தற்பொழுது மாகாண சாம்பியனாக முன்னேற்றம் கண்டுள்ளனர். அதுவும் ஒரு கிராம பாடசாலை இவ்வாறு முன்னேற்றம் காண்பது ஒரு சிறப்புமிக்க விடயமாகும். உண்மையில் இவர்களை பயிற்றுவிப்போரும் போற்றப்பட வேண்டியவர்கள். நாம் எந்த கஷ்டமும் இல்லாது எதையும் சாதிக்க முடியாது.
சூரியன் பிரகாசிப்பது அது எரிவதனாலேதான். அவ்வாறுதான் கல்வியாக இருக்கலாம் விளையாட்டாக இருக்கலாம் நாம் கஷ்டப்பட்டால்தான் நாமும் பிரகாசிக்க முடியும்.
இத்துடன் நின்று விடாது தேசிய மட்டத்திலும் நீங்கள் இவ்வாறான வெற்றியை பெற உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் தெரிவித்து நிற்கின்றேன். என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
(தலைமன்னார் விஷேட நிருபர்)