மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று உரிய தரப்பினருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம். ஹனீபா தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் பட்டதாரி இளம் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. சம்பவத்தன்று நோயாளர் விடுதியிலிருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்களின் அலட்சியத்தால் இம்மரணம் இடம்பெற்றுள்ளதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே இதுதொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று உரிய வைத்தியர் மற்றும் கடமையில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று அதன் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்தன் கலந்து கொண்டிருந்தார்.
எனவே இதுதொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்து உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம். ஹனீபா பாராளுமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தார்.
(மன்னார் குறூப் நிருபர்)