பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த இலங்கை, கட்டம் கட்டமாக மீட்சி பெற்று பொருளாதார மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களின் பயனாக குறுகிய காலப்பகுதிக்குள் இவ்வாறான முன்னேற்றங்களை இந்நாட்டினால் அடைந்து கொள்ள முடிந்திருக்கிறது.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட தவறான பொருளாதார வேலைத்திட்டங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் 19 பெருந்தொற்று என்பவற்றின் விளைவாக 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நாடு பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்தது. மக்களும் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
அந்தச் சூழலில் நாட்டின் தலைமையை விட்டு அன்றைய ஆட்சியாளர்கள் வெளியேறினர். ஆனால் அச்சமயத்தில் நாட்டின் தலைமையை ஏற்று பொருளாதார ரீதியில் நாட்டை மீளக்கட்டியெழுப்பவோ, மக்களது நெருக்கடிகளுக்கு நிவாரணங்களையும் தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கவோ எவரும் முன்வராத துர்ப்பாக்கிய நிலை உருவானது. அந்தச் சூழலில் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நாட்டினதும் மக்களினதும் நலன்களை விடவும் தமதும் கட்சியினதும் நலன்களுக்கு மாத்திரமே முன்னுரிமை அளித்து தீர்மானங்களை எடுத்தனர். ஆபிரிக்க நாடுகளில் போன்று வன்முறைகளும் வழிப்பறிக் கொள்ளைகளும் தலைதூக்கி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் கூட பரவாயில்லை என்ற அடிப்படையிலேயே அவர்களது தீர்மானங்களும் செயற்படுகளும் அமைந்திருந்தன.
அந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையை ஏற்றதோடு பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்தார். அந்த வேலைத்திட்டங்கள் குறுகிய காலப்பகுதி முதல் பிரதிபலன்களை அளிக்கத் தொடங்கின. அதன் பயனாக பொருளாதார வீழ்ச்சி நிலவிய போது மக்கள் முகம்கொடுத்த நெருக்கடிகளும் அசௌகரியங்களும் கட்டம் கட்டமாக நீங்கலாயின. அதன் பிரதிபலன்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இப்பின்புலத்தில் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க சர்வதேச நாணய நிதியமும் முன்வந்தது. நாடு பொருளாதார ரீதியில் தொடர்ந்தும் முன்னேற்றப்பாதையில் பயணிக்க இது பக்கத்துணையாக அமைந்தது. நாட்டின் உற்பத்தி மற்றும் சேவைகள் துறையில் தொடரான முன்னேற்றங்கள் பதிவாகலாயின. அதாவது உல்லாசப் பயணிகளின் வருகை, வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணி என்பன அதிகரிக்கத் தொடங்கின. ஏற்றுமதி வருவாயும் உயர்வடையத் தொடங்கியது.
இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் அனைத்துத் துறைகளிலும் நம்பிக்கை அளிக்கும் வகையில் முன்னேற்றங்களை வெளிப்படுத்தியது. இதன் விளைவாக மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னேற்றகரமான பாதையில் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அந்த வகையில் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீற்றர் ப்ரூவர் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரச வருமானத்தை அதிகரிக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அந்நியச் செலாவணி கையிருப்பை மேம்படுத்தவும் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதைக் குறிப்பாகப் பாராட்டியுள்ளார். அவ்வேலைத்திட்டங்கள் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் சாதகமான பிரதிபலன்களை அளித்து வருகின்றன.
பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகி வங்குரோத்து நிலையை அடைந்திருந்த நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்பவென முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்து வருவதன் பயனாக பொருளாதாரம் முன்னேற்றமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
அதனால் இவ்வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டில் இனியொரு போதும் பொருளாதார நெருக்கடி ஏற்படக் கூடாது. அதற்கு இடமளிக்கவும் கூடாது என்பதே மக்களது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. அதன் காரணத்தினால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் இப்பொருளாதார வேலைத்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்திட்டங்களை சீர்குலைக்ககோ, நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படவோ துணைபோகலாகாது.