ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி அபேட்சகர் போட்டியிலிருந்து தாம் விலகுவதாக வர்த்தகர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட காரணங்களுக்காக தாம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக தம்மிக பெரேரா குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளை (07) காலை பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் அக்கட்சியின் வேட்பாளர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக, கட்சியின் நிறுவுனரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக உள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஶ்ரீ.ல.பொ.பெ. வேட்பாளராக அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பசில் ராஜபக்ஷவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதற்கேற்றாற் போல், நாமல் ராஜபக்ஷவின் பல்வேறு புதிய அரசியல் ரீதியான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.