– கொலன்னாவ வெள்ளப்பெருக்கு நிலைமைக்கு தீர்வு
– காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை தொடர்பில் தீர்மானம்
– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 18 தீர்மானங்களில் 14 யோசனைகள் ஜனாதிபதி முன்வைப்பு
சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதம் 8.5% இலிருந்து 10% ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 18 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
சமகாலத்தில் நிலையான வைப்புக்களுக்கான வட்டிவீதம் 8.5% சதவீதமாகக் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. அதனால், அதிகமான சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புக்களிலிருந்து பணத்தை மீளப் பெற்றுள்ளனர். அதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் உயர்ந்தபட்சம் ஒரு மில்லியன் ரூபாய்கள் வரைக்குமான நிலையான வைப்புக்களுக்கான வருடாந்த வட்டிவீதத்தை 10% சதவீதமாக இரண்டு வருடங்களுக்கு வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2. இந்தோனேசியா – இலங்கை முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் (ISLPTA)
இந்தோனேசியா – இலங்கை முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் (ISLPTA) தொடர்பாக இரண்டாவது வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழுக் கூட்டம் 2024.07.15 மற்றும் 16 ஆகிய தினங்களில் கொழும்பில் நடாத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்தோனேசியா – இலங்கை முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடல்களை 2024 டிசம்பர் மாதமாகும் போது பூர்த்திசெய்வதற்கும் 2025 மார்ச் மாதத்தில் குறித்த வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் இருதரப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளமையைக் குறிப்பிட்டு ஜனாதிபதி சமர்ப்பித்த விடயங்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.
3. சமுத்திரவியல் கற்கைகளுக்கான பிராந்திய நிலையத்தை இலங்கையில் தாபித்தல்
இலங்கையானது,இந்து சமுத்திரத்தை அண்டிய நாடுகளின் ஒன்றியத்தின் (IORA) உறுப்புநாடாக சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் அதனுடன் தொடர்பாக மேற்கொண்டுள்ள பல்வேறு தொடக்க முயற்சிகளைக் கருத்திற் கொண்டு, பொதுவான கற்கைகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அறிவுசார் விடயங்கள் மற்றும் நடவடிக்கைகளை பிராந்தியம் முழுவதும் பகிர்ந்து கொள்ளும் வகையில் “பிராந்திய சமுத்திரவியல் கற்கை நிலையமாக” இலங்கையை நிறுவுவது மிகவும் பொருத்தமானதெனபிரான்ஸ் அரசு அடையாளங்கண்டுள்ளது.
முன்மொழியப்பட்ட நிலையமாக, ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் தாபிப்பதற்கும், அதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை திருகோணமலை கப்பல்துறை மற்றும் சமுத்திரவியல் கல்லூரி மூலம் பெற்றுக்கொள்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, உத்தேச “பிராந்திய சமுத்திரவியல் கற்கை நிலையத்தை” தாபிப்பதற்கு ஏற்புடைய இலங்கை அரசு மற்றும் பிரான்ஸ் அரசுக்கிடையிலான இருதரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
4. அரச சேவையின் வினைத்திறனையும் தரப்பண்பையும் அதிகரித்தல்
அரச நிறுவனங்களில் வினைத்திறனையும் தரப்பண்பையும் அதிகரிப்பதற்காக மேற்பொருந்தல் தவறுகளை குறைப்பதற்காகவும், தகவல்களை உறுதிப்படுத்துவதன் மூலம் உற்பத்தி திறன் மற்றும் சிறப்பாக பணிகளை நிறைவேற்றுவதற்காக அரச நிறுவனங்களின் தகவல் தொழிநுட்ப முறைமையை ஒருங்கிணைத்தல் பொருத்தமானது என கண்டறியப்பட்டுள்ளது.
அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்கள் மூலம் ஒழுங்குமுறைப்படுத்தும்/ மேம்படுத்தப்பட்ட தகவல் தொழிநுட்ப முறைமைக்காக தரவுகளை உட்சேர்க்கும் போது கீழ்காணும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 15 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜையை இனங்காண்பதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்துவதை கட்டாயமாக்கல்.
• வெளிநாட்டு நபரொருவரை இனங்காண்பதற்காக அவருடைய கடவுச்சீட்டு இலக்கத்தைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கல்.
• நிறுவனத்தின் தனித்துவ அடையாளத்தை இனங்காண்பதற்காக வியாபாரப் பதிவிலக்கம் மற்றும் அந்நிறுவனங்களின் உரிமையாளர்களின்/பணிப்பாளர் சபையின் உள்நாட்டு உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கமும், வெளிநாட்டு உறுப்பினர்களின் கடவுச்சீட்டு இலக்கமும் பயன்படுத்துவதை கட்டாயமாக்கல்.
• ஏற்புடைய தரவுகளை முறைசார்ந்த வகையில் ஏனைய அரச நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு இயலுமை கிட்டும்வகையில் தரவு தரப்படுத்தலை மேற்கொள்ளல்.
5. சிறுவர் பகல் பராமரிப்பு வசதிகள் தொடர்பான தேசியக்கொள்கை
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சிறுவர் பகல் பராமரிப்பு நிலையங்களில் ஒரேவிதமான நடவடிக்கை முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றமையை உறுதிப்படுத்துவதற்கும் முறைசார்ந்த வகையில் பதிவு செய்தல் மற்றும் மேற்பார்வை பொறிமுறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் 2017ஆம் ஆண்டில் சிறுவர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கான தேசிய வழிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, சிறுவர் பகல் பராமரிப்பு சேவைகள் அனைத்து மாகாணங்களிலும் ஒரே விதமாக அமுல்படுத்துவதற்கும் முறைசார்ந்த ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை பொறிமுறையை அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சிறுவர் பகல் பராமரிப்பு வசதிகள் தொடர்பான தேசியக்கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
6. பெங்கிரிவத்த புகையிரத நிலையம் தொடக்கம் பாதுக்க புகையிரத நிலையம் வரைக்கும் களனிவெலி புகையிரதப் பாதை ஒதுக்கிடத்தில் குடியேறியுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றல்
கொழும்பு நகரை அண்டிய புகையிரத வீதி வேலைத்திட்டத்தின் கீழ் உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி மாளிகாவத்தை லொகோ சந்தியிலிருந்து பாதுக்க புகையிரத நிலையம் வரைக்கும் புகையிரதப் பாதை ஒதுக்கிடத்தில் குடியேறியுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை மீள்குடியமர்த்தப்படுவதுடன், தற்போது கிருலப்பன புகையிரத நிலையம் வரைக்குமான பகுதியில் சட்டவிரோத குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
பெங்கிரிவத்த புகையிரத நிலையம் தொடக்கம் பாதுக்க புகையிரத நிலையம் வரைக்குமான பகுதியின் புகையிரத ஒதுக்கிடத்தில் வசிக்கின்ற குடியிருப்பாளர்களில் அதிக சதவீதமானோர் 30 ஆண்டுகளுக்கு மேலாக புகையிரத ஒதுக்கிடத்தில் பாதுகாப்பற்ற விதத்தில் சட்டவிரோதமாக வசித்துவருவதுடன், அவர்களில் 350 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்கு அடையாளங்காணப்பட்டுள்ளது.
அதற்கமைய நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான கொழம்பகே மாவத்தை வீடமைப்பு தொகுதி மற்றும் புகையிரத வேலைத்திட்டத்தின் மூலம் கொட்டாவ மாலபல்ல நிர்மாணிக்கப்பட்டுவரும் வீடமைப்புத்தொகுதின் வீட்டு அலகுகளை பயன்படுத்தி குறித்த குடும்பங்களுக்கு வீட்டுவசதிகளை வழங்குவதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
7. விவசாய வனவியல் தொடர்பான ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம் மற்றும் ஏற்றுமதி விவசாய திணைக்களத்துக்குமிடையிலான உபகரணங்களை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம்
பசுமை காலநிலை நிதியத்தின் மூலம் நிதி வழங்கப்படுகின்றதும் விவசாய வனவியல் தொடர்பான ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையத்தின் மூலம் ஒத்துழைப்பு வழங்கப்படுகின்ற நக்கிள்ஸ் மலைத்தொடரில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆற்றுப்படுக்கைகள், நீர்மூலப் பிரதேசங்கள் மற்றும் கீழ்ப் பள்ளத்தாக்கு பிரதேசங்களில் குடியேறி தங்கிவாழும் விவசாயிகளின் மற்றும் விவசாயப் பெருந்தோட்ட சமூகத்தவர்களின் காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கமடைகின்ற திறன்களை விருத்திசெய்யும் நோக்கில் நீர்ப்பாசன அமைச்சால் நக்கிள்ஸ் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு கூறாக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் மண் ஒளிக்கதிர் ஆராய்ச்சி ஆய்வுகூடம் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு விவசாய வனவியல் தொடர்பான ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு அந்நிறுவனம் மற்றம் ஏற்றுமதி விவசாய திணைக்களத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
8. வணிக மட்டத்திலான ஃபூட்சால் உள்ளக விளையாட்டரங்கை நிறுவுதல்
ஃபூட்சால் என்பது, செயற்கையாக ஒரு விளையாட்டு மைதானத்தில் விளையாடப்படும் காற்பந்து சார்ந்த விளையாட்டாகும். இவ்விளையாட்டுக்கு 40×20 மீற்றர்களும் உயரம் 04 மீற்றர்களுமான உள்ளக விளையாட்டரங்கைப் பயன்படுத்துவர். சமகாலத்தில் இலங்கையின் நகரங்களை அண்டிய பகுதிகளில் ஃபூட்சால் உள்ளக விளையாட்டரங்குகள் சில நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ்விளையாட்டுக்கு அதிகளவு கேள்வி நிலவுவதுடன், அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் தனியார் முதலீட்டாளருக்கு காணியை குத்தகை அடிப்படையில் வழங்கி அரசுக்குச் சொந்தமான விளையாட்டரங்குகள் மற்றும் காணிகளைப் பயன்படுத்தி ஃபூட்சால் விளையாட்டை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய, அடையாளங் காணப்பட்டுள்ள காணிகள் மற்றும் விளையாட்டரங்கு வளாகங்களில், உயர்ந்தபட்சம் 30 வருடகாலத்திற்கு /பூட்சால் விளையாட்டரங்குகளை நிர்மாணிப்பதற்காக, அரச பெறுகைச் செயன்முறையைக் கடைப்பிடித்து தனியார் முதலீட்டாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கும், குறித்த முதலீட்டாளர் மூலம் பாகிஸ்தான் அரசின் நன்கொடையாக வழங்கப்படும் 02 செயற்கை ஃபூட்சால் தளங்களை டொரின்ரன் மற்றும் சுகததாச விளையாட்டரங்குகளை நிர்மாணிப்பதற்கும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
9. ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் முன்மொழியப்பட்ட தம்புள்ள தொழிநுட்ப வளாகம் (Campus)
ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள சிவில் மாணவர்களுக்கு தனது சேவைகளை விரிவாக்கம் செய்யும் நோக்கில் தம்புள்ள நகரில் தொழிநுட்ப வளாகமொன்றை (Campus) தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள தம்புள்ள தொழிநுட்ப வளாகத்திற்குப் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்காமல், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான தம்புள்ள நகரில் அமைந்துள்ள நிர்வாகக் கட்டிடமொன்றைக் குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கும், ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ சபையின் கீழ், சுயாதீன நிறுவனமாக முன்மொழியப்பட்டுள்ள வளாகத்தை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த தொழிநுட்ப மண்டபத்தைத் தாபிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவுதல்
தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி அமைப்புக்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு 2021.10.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் (SDP) சலுகையுடன் கூடிய CHEC PORT CITY COLOMBO (PRIVATE) LIMITED இற்கு வழங்கப்பட்டுள்ள கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் காலப்பகுதியை நீடித்தல்
2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள கருத்திட்டமான கொழும்புத் துறைமுக நகரத்தை நிர்மாணிக்கும் பணிகள் CHEC PORT CITY COLOMBO (PRIVATE) LIMITED இற்கு 2016 ஆம் ஆண்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் மேலும் எஞ்சியுள்ள பணிகளைப் பூர்த்தி செய்வதற்கும், குறித்த வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குமான கருத்திட்டக் காலப்பகுதியை 2027.06.30 வரை நீடிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. நாடு தழுவிய சேவைகளுக்குரிய நிறைவேற்றுத்தர உத்தியோகத்தர்களைப் பயிற்றுவிப்பதற்காக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் மற்றும் இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய நிலையத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஜனாதிபதி 2023 யூலை மாதம் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்தியப் பிரதர் கௌரவ நரேந்திர மோடி அவர்களுடன் இடம்பெற்ற இருதரப்புக் கலந்துரையாடலில் இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய நிலையத்துடன் இணைந்து இலங்கையின் அரச சேவையின் திறமைகளையும் இயலளவையும் விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA) மற்றும் இந்தியாவின் நல்லாட்சிக்கான தேசிய நிலையத்திற்கும் (NCGG) இற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் பரந்து காணப்படும் பயன்பாட்டுக்கு உதவாத பொருட்களை அகற்றி, தொழிற்சாலை வளாகத்தை துப்பரவாக்கும் ஒப்பந்தத்தை வழங்கல்
காங்கேசன்துறையில் அமைந்துள்ள சீமெந்துத் தொழிற்சாலை வளாகத்தில் பரந்து காணப்படும் இரும்பு மற்றும் ஏனைய உலோங்களாலான பகுதிகளை சேகரித்து தொழிற்சாலை வளாகத்தைத் துப்பரவு செய்வதற்கான தேசிய போட்டி விலைமனுக்கோரல் முறையைக் கடைப்பிடித்து விலைமுறி கோரப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ்விலைமனுக் கோரலுக்கு ஆறு (06) விலைமனுதாரர்கள் விலைமுறிகளைச் சமர்ப்பித்துள்ளதுள்ளதுடன், அவற்றில் மூன்று பேர் விலைமனு ஆவணங்களின் அடிப்படையில் தகைமையற்றவர்களாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பெறுகைக் குழுவின் விதந்துரைகளுக்கமைய விபரங்களுடன் கூடிய விலைமனுதாரரான லும்நெக்ஸ் பீஎல்சீ இற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் மற்றும் எகிப்தின் இராஜதந்திர கற்கைகள் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை மற்றும் எகிப்திற்கும் இடையில் நிலவுகின்ற வரலாற்று ரீதியான உறவை மேம்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர அறிவுசார் விடயங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இரண்டு நாடுகளின் இராஜதந்திர பயிற்சி நிறுவனங்களுக்கிடையே பரஸ்பர தொடர்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதன்கீழ் இராஜதந்திரிகள், கல்வியலாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நிபுணர்களைப் போலவே, ஆய்வாளர்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கும், கற்கைகள் மற்றும் பல்வேறு மாநாடுகளை ஒழுங்குபடுத்தி அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் வசதிகளை வழங்குவதற்கும் இருதரப்பினருக்கிடையில் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
அதற்கிணங்க, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வெளிவிவகார அமைச்சின் பண்டாரநாயக்கா சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் மற்றும் எகிப்து அரபுக் குடியரசின் வெளிவிவகார அமைச்சின் இராஜதந்திர கற்கைகள் நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
15. 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 2024.07.26 திகதிய 2394/67 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (கரைகடந்த வங்கித் தொழில் – முதனிலை) ஒழுங்குவிதி.
• 2024.07.26 திகதிய 2394/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க கொழும்புத் துறைமுக நகர (கரைகடந்த வங்கித் தொழில் – கவனமுள்ள முகாமைத்துவம் மற்றும் நம்பகத்தன்மை) ஒழுங்குவிதி.
16. கொலன்னாவ வெள்ளப்பெருக்கு நிலைமை
கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களை தேடி ஆராய்ந்து அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கு தேவையான விதந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும், கொலன்னாவ நகர மீள் கட்டமைப்புக்கான விரிவான அபிவிருத்தித் திட்டமொன்றை தயாரிப்பதற்காக கொழும்பு மாவட்டச் செயலாளர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக 2024.06.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளப்பெருக்குக்கான மூலக்காரணங்களை அடையாளங்கண்டு, மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதை தடுப்பதற்காக இலங்கை காணி அபிலிருத்திக் கூட்டுத்தாபனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையும், நகர அபிவிருத்திச் சபையால் தயாரிக்கப்பட்டுள்ள கொலன்னாவ நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் கொட்டிக்காவத்த – முல்லேரியா நகர அபிவிருத்தித் திட்டத்தை நான்கு மாதத்தில் தயாரித்து நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட 16 விதந்துரைகளை குறித்த குழு சமர்ப்பித்துள்ளது.
குறித்த விதந்துரைகளை சரியாக ஆராய்ந்த பின்னர் பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் ஊடாக அமுல்படுத்துவதற்கும், அது தொடர்பான தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்புக்காக கௌரவ பிரதமர் அவர்களுடைய தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
17. அரச சேவையில் நிலவுகின்ற ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குதல்
அரசால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களாலும், அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களாலும், ஒருசில ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகள் தோன்றியுள்ளன. அதற்கமைய, 2016.01.01 ஆம் திகதி தொடக்கம் 2020.01.01 வரைக்குமான ஓய்வூதியம் பெறுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு அநீதிகள் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதன் மூலம் 83,000 அரச ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு இயலுமை கிட்டும்.
குறித்த ஓய்வுதியதாரர்களின் ஓய்வூதியம் 2016.02.25 ஆம் திகதிய பொது நிருவாக சுற்றறிக்கை இலக்கம் 03ஃ2016 இன் அட்டவணை இலக்கம் 01 இற்கமைய, முழுமையான சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்தபட்சம் 2,500/=-ரூபாய்கள் அதிகரிக்கும் வகையில் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
18. தேசிய காலநிலை இடைவெளித் தரவுகள் அபிவிருத்திக் கருத்திட்டம்
காலநிலை மாற்றம், மாறுபடும் நிலைகள் மற்றும் ஓரங்கட்டப்படும் சம்பவங்களின் தாக்கங்களால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம், சுற்றாடல் தொகுதி, கட்டியெழுப்பப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் முதலீடுகள் குறிப்பிடத்தக்களவு இடர்களுக்கு உள்ளாகியுள்ளன. குறித்த இடர்களைக் குறைப்பதற்காக இலங்கைக்கான காலநிலை மீட்சித்திறன் தொடர்பான முதலீட்டுப் பயண வரைபடமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் போது தேசிய காலநிலை இடைவெளித் தரவு முறைமையை உருவாக்கி மேம்படுத்துதல் அடிப்படையானதும் அவசியமானதுமான படிமுறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சிங்கப்பூர் M/s PROCLIME PTE. LTD உடன் இணைந்து தேசிய காலநிலை இடைவெளித் தரவுகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.