மத்திய கிழக்கில் போர் பதற்றத் அதிகரித்திருக்கும் சூழலில் பல நாடுகளும் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்திருப்பதோடு ‘லெபனானில் இருந்து உடன் வெளியேறுவதற்கு’ தமது நாட்டு மக்களை அமெரிக்கா அறிவிறுத்தியுள்ளது.
பிரிட்டன், சுவீடன், பிரான்ஸ், கனடா மற்றும் ஜோர்தான் நாடுகளும் இது போன்ற பயண எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
டெஹ்ரானில் வைத்து கடந்த புதன்கிழமை ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மைல் ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டும் ஈரான் கடுமையான பதிலடி கொடுக்க உறுதிபூண்டுள்ளது.
பெய்ரூட்டில் வைத்து ஹிஸ்புல்லா அமைப்பின் முன்னணி தளபதியான புவாத் ஷுக்ர் கொல்லப்பட்டு சில மணி நேரத்தின் பின்னரே ஹனியே படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இஸ்ரேல் மீது முன்னெடுக்கப்படும் எந்த ஒரு பதிலடியிலும் லெபனானைத் தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு முக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு அவ்வாறான பதிலடி ஒன்று பிராந்தியத்தில் முழு அளவில் போர் ஒன்றை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று வடக்கு இஸ்ரேலில் உள்ள பெயித் ஹிலால் நகர் மீது சரமாரி ரொக்கெட் குண்டுகளை வீசியது. இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோம் ரொக்கெட்டுகளை இடைமறிக்கும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியாகி இருந்தன. பாதிப்புகள் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பதிலடியாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காசாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அங்கு மேலும் பலர் கொல்லப்பட்டிருப்பட்டிருப்பதோடு இஸ்ரேலில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
டெல் அவிவுக்கு அருகில் உள்ள ஹொலோனில் நேற்றுக் காலை பரபரப்பான நேரத்தில் பலஸ்தீன தாக்குதல்தாரி இந்தக் கத்திக்குத்தை நடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்தியவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கு நீடித்து வரும் போர் பிராந்தியம் எங்கும் பதற்றத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தும் அதே தீவிரத்துடன் இடம்பெற்று வருகிறது.
காசா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மற்றொரு பாடசாலை மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மறுபுறம் டெயர் அல் பலாஹ்வில் உள்ள அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு அருகில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியுள்ள கூடாரங்கள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய ஆளில்ல விமானத் தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் 16 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அந்தக் கூடாரங்களில் பாரிய அளவில் தீ பரவியுள்ளது.
டெயிர் அல் பலாஹ் அகதி முகாமில் அல் ஹசனத் குடும்பத்திற்குச் சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு காசாவில் ஜபலியா அகதி முகாமின் அல் பகூரா பகுதியில் அல் அமூதி குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 33 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 118 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த பத்து மாதங்களில் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 59,583 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 91,398 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லெபனானில் உள்ள அமெரிக்க தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில், லெபனானில் தொடர்ந்து தங்கி இருக்க தீர்மானிக்கும் அமெரிக்க பிரஜைகள் அவசர திட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் நீண்ட காலம் தங்குவதற்கான இடம் ஒன்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல விமான சேவைகளும் விமானங்களை இடைநிறுத்தி மற்றும் ரத்துச் செய்திருப்பதோடு பல விமான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்திருப்பதாகவும் லெபனானில் இருந்து வெளியேறுவதற்கு வர்த்தக விமானத்திற்கான வாய்ப்பு தொடர்ந்து இருப்பதாகவும் அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அதன் கூட்டணிகளால் நடத்துவதற்கு வாய்ப்புள்ள தாக்குதல்களில் இருந்து இஸ்ரேலின் பாதுகாப்புக்கு உதவ பிராந்தியத்திற்கு மேலதிக போர்க் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.
மக்களை வெயியேற்றும் பணிகளுக்கு உதவும் வகையில் மேலதிக இராணுவத்தினர், தூதரக பணியாளர்கள் மற்றும் எல்லைக் காவல் அதிகாரிகள் அனுப்பப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் பிரிட்டன், ‘வர்த்தக விமானங்கள் செயற்படும்போதே லெபனானை விட்டு வெளியேறிவிடும்படி’ நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இரு பிரிட்டன் இராணுவ கப்பல்கள் ஏற்கனவே பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருப்பதோடு அந்நாட்டு விமானப்படை போக்குவரத்து ஹெலிகொப்டர்களை தயார்நிலையில் வைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசெப் பொரெல் கடந்த வெள்ளிக்கிழமை, ஈரான் பதில் வெளியுறவு அமைச்சர் அலி பக்கரி கானியை தொலைபேசியில் அழைத்திருந்தார். அப்போது, ‘இஸ்ரேலை தண்டிக்கும் இயல்பான மற்றும் சட்டரீதியான உரிமையை ஈரான் சந்தேகத்திற்கு இடமின்றி பயன்படுத்தும்’ என்று கானி குறிப்பிட்டிருந்தார்.
‘உலகம் அசாதாரண காட்சிகளை காணும்’ என்று ஈரான் அரச தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார். இஸ்ரேலியர்களை எச்சரித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘சவாலான நாட்கள் எம்முன்னே உள்ளது. அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நாம் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளோம். எந்த ஒன்றுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.