கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் ஆடி அமாவாசை தினமான நேற்று (04) வெகு விமரிசையாக நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அரோகரா என்ற கோசங்கள் முழங்க தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவாகம கலாநிதி சிவ ஸ்ரீ கமலராஜ குருக்கள் தலைமையில் உற்சவம் கிரியைகள் இடம்பெற்றன.
இராம பிரானால் வழிபட்ட பெருமையினைக் கொண்டமைந்துள்ள ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாகவும், இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் திகழ்கின்றது.
பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக் கொண்ட பெருமையினை கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயம், அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தணிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக் கொண்டதாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)