திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பதிகத்திலே “சதுரம்மறை” என்னும் முதற்றிருப்பாட்டுப் பாடியமாத்திரத்தில் திருக்கதவு அடைக்கப்பட்டது. அதுகண்டு, நாயன்மாரிருவரும் திருவருளை வியந்து களிப்புற்று வணங்கினார்கள். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தாம் எடுத்த திருப்பதிகத்தை முடித்தருளினார். அன்று தொடுத்து அந்தத் திருக்கதவு திறத்தலும் அடைத்தலுமாகிய வழக்கம் என்றும் நிகழ்ந்தது. அங்கே நிகழ்ந்த அற்புதத்தைக் கண்ட அடியார்கள் சமஸ்தரும் ஆச்சரியங்கொண்டு, உரோமாஞ்சங்கொள்ள கண்ணீர்சொரிய நாயன்மாரிருவருடைய திருவடிகளிலும் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
நாயன்மாரிருவரும் திருமடத்தை அடைந்தபின் திருநாவுக்கரசு நாயனார் “சிவபெருமான் ஆதியிலே அருளிச் செய்த முதனூலாகிய வேதங்களின் தாற்பரியங்களை அமைத்துத் தமிழ் வேதஞ் செய்தருளும் சிவாநுபூதிப் பெருவாழ்வாகிய திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தாமே அக்கடவுளைப்போல அருட்செய்கை செய்ய வல்லவர். அவரொழிந்த என்போலும் அடியார்களுக்கு அவ்வேதங்களோடு இடையீடு பெரிதாகும். அவ்வேதங்களாலே திருக்காப்புச் செய்யப் பட்ட திருக்கதவு என்பாடலினல் அரிதிற்றிறக்கப்பட்டதும், அவர் பாடலினால் எளிதில் அடைக்கப்பட்டதும் இதனாலன்றோ” என்று சிந்தித்து, அருநித்திரை செய்தார். அப்பொழுது பரமசிவன் அவரிடத்திற் சென்று, “நாம் வாய்மூரிலே இருப்போம், அவ்விடத்திற்குத் தொடர்ந்து வா” என்று அருளிச் செய்துபோக; அப்பமூர்த்தி அவருக்குப்பின் விரைந்து சென்றார். நெடும்போது சென்றதும், அவரைச் சமீபிக்கப்பெற்றிலர். சுவாமி சமீபத்திலே காட்சி கொடுப்பவர்போல ஒரு திருக்கோயிலை எதிரே காண்பித்து, அதனுள்ளே புகுந்தருள; அப்பமூர்த்தியும் அவ்விடத்திலே விரைந்து தொடர்ந்தார். பிள்ளையாரும், அப்பமூர்த்தி திருவாய்மூருக்குப் போகின்றார் என்று கேள்வியுற்று, வந்து சேர்ந்தார். அப்போது பரமசிவன் பார்வதியாரோடு ஆடல் காட்ட; பிள்ளையார் தரிசித்துத் திருப்பதிகம் பாடினார். பின் அப்பமூர்த்தியோடு திருவாய்மூருக்குப் போய், சுவாமிதரிசனஞ் செய்து கொண்டிருந்து, சிலநாளாயின பின், வேதாரணியத்துக்குத் திரும்பி வந்து, சுவாமி தரிசனஞ் செய்து கொண்டிருந்தார். அது நிற்க.
பாண்டிநாட்டிலே பாண்டியராஜன் தான் பூர்வஜென்மத்திலே செய்த தீவினையினால், உலகமெல்லாம் இப்படியே நித்தியமாய் இருக்கும் அருகேசுரன் குருத்துவமாத்திரத்திலே கருத்தாவாய் இருப்பன் எனப்பிதற்றுகின்றபடிகளாகிய சமணர்களுடைய துர்ப்போதனையை மெய்யென்று துணிந்து, சத்தியமார்க்கமாகிய சைவத்தை விட்டு, அவர்களுடைய அசத்திய மார்க்கமாகிய ஆருகதமதத்திலே பிரவேசித்தான்.
(தொடரும்)
கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.