Home » ஆடி போக வைக்கும் ஆடி மாதம்

ஆடி போக வைக்கும் ஆடி மாதம்

by damith
August 5, 2024 6:03 am 0 comment

சூரியனை அடிப்படையாகக் கொண்ட மாதங்கள் நம் தமிழ் மாதங்கள். சூரியபகவான் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையிலான ஆறு மாதங்களும் தட்சிணாயன புண்ணியகாலம் எனப்படும். சூரிய பகவான் தனது வடக்கு முகமான பயணத்தை முடித்துத் தெற்கு திசை நோக்கிய பயணமே தட்சிணாயனம். தெற்கு என்பதே பித்ருக்களின் திசையைக் குறிக்கும். அதனால்தான் இந்தக் காலத்தில் மிகுதியாகப் பித்ருக்களுக்கு பிரீத்தி செய்யும் வழிபாடுகள் மிகுதியாக இருக்கும்.

இந்த ஆடி மாதத்தில் மற்றுமொரு சிறப்பு, ஆறு மாதத்துக்கும் மேலாகச் சந்திரனைத் தவிர வேறு கிரகங்கள் அனைத்தும் கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையிலேயே அடைபட்டு இருக்கின்றன. சந்திரனும் மாதத்தில் பாதி நாள்கள் கேதுவுக்கும் ராகுவுக்கும் இடையில் நகர்ந்து கால சர்ப்ப தோஷம் அமைந்தது. கடந்த டிசம்பர் மாதம் தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை ஏற்பட்டது. இதன்பின்தான் நோய் தொற்று தோன்றி உலகையே ஆட்டிவைத்தது. தற்போது ஆரோக்கியத்துக்கு அதிபதியான சூரியன் அந்த நிலையை உடைத்து வெளியே வருவது மிகவும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. எனவே, நோய்த் தொற்று படிப்படியாகக் குறையும் என்று நம்பப் படுகிறது.

ஆடி மாதத்தின் தொடக்கமே புண்ணியகாலமாகக் கருதப்படும். இந்த நாளில் முன்னோர்களுக்குரிய வழிபாடுகளைச் செய்வது மிகவும் புண்ணிய பலன்களைத் தரும். அதனால்தான் ஆடி மாதத்தின் முதல் நாளை ஆடிப் பண்டிகை என்றே சொல்வது வழக்கம்.

ஆடிமாதத்தில் வரும் மற்றுமொரு புண்ணிய தினம் அனைவரும் தவறவிடக் கூடாத, ஆடி அமாவாசை. ஆடி அமாவாசை அன்று சமுத்திரக் கரைகளிலும் நதிக்கரைகளிலும் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தரும் வழக்கம் உண்டு. இந்த நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு வாழ்வில் முன்வினை காரணமாக உண்டாகும் தீவினைப் பயன்களைக் குறைத்து நல்வினைப் பயன்களை அதிகப்படுத்தும்.

ஆடிப்பூரம்

பூமி தேவியின் அம்சமான ஆண்டாள் நாச்சியார் இந்த பூலோகத்தில் அவதரித்த திருநாள். அன்னை பார்வதி தேவி இந்த உலகின் நன்மைக்காக பூலோகத்தில் தோன்றிய தினமும் ஆடிப்பூரம் என்கின்றன புராணங்கள். பூர நட்சத்திர தினத்தில் அம்மன் வழிபாடும் ஆண்டாள் வழிபாடும் செய்வது மிகவும் பயனுடையதாகச் சொல்லப்படுகிறது. ஆடிப்பெருக்கு

ஆடி மாதம் என்பது விவசாயத்தைத் தொடங்கும் மாதம். மழை பொழிந்து நதியில் நீர்ப்பெருக்கு காணும் மாதம். அதனால்தான் ஆடிப் பட்டம் தேடி விதை என்னும் பழமொழி நம்மிடையே காணப்படுகிறது. நீரே நமக்கு உணவாகிறது. அந்த நீரை வழிபடும் நாள் ஆடிப்பெருக்கு. ஆடி மாதம் 18 ம் தேதி இது கொண்டாடப்படுவதால் பதினெட்டாம் பெருக்கு என்றும் சொல்லப்படுகிறது. காவிரித் தாயை இந்த நாளில் பூத்தூவிக் கொண்டாடும் மரபு நம்மிடையே உண்டு. அவ்வாறு செய்வதன் மூலம் நல்ல விளைச்சல் உண்டாகும் என்பது நம்பிக்கை.

இவை தவிர முருகக் கடவுளை வழிபட வேண்டிய ஆடிக் கிருத்திகை, ஹயக்கிரீவரை வழிபட வேண்டிய ஆடிப் பௌர்ணமி, ஹரியும் ஹரனும் ஒன்று என்று விளக்கும் ஆடித் தபசு என்று பல்வேறு சிறப்புகளும் இந்த மாதத்தில் உண்டு.

ஆடியில் அம்மன் வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. ஆடி மாதம் காற்றடி காலமாகச் சொல்லப்படுவது. காற்றின் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும் காலம் இது. எனவே இந்தக் காலத்தில் நோய்கள் நீங்க வீட்டில் வேப்பிலைக் காப்பிட்டு அம்மனை வழிபடும் மாதமாக இந்த ஆடி மாதத்தை நம் முன்னோர்கள் குறித்தனர். அம்மனை இந்த மாதத்தில் வீட்டுக்கு அழைத்து அவளுக்குகந்த கூழ் ஊற்றி வழிபடுவது வழக்கம். அனைத்து அம்மன் கோயில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். கிராமங்களில் அனைத்து கிராம தேவதைக் கோயில்களிலும் விழாக்கள் களைகட்டும். எந்த தெய்வத்தை மறந்தாலும் குல தெய்வத்தை வழிபட மறக்கக் கூடாது என்பது பழமொழி. குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டிய மாதமாக இந்த ஆடி மாதம் திகழ்கிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x