பொருளாதார பின்னடைவினால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டை மீட்டெடுத்து குறுகிய காலத்திற்குள் வளமான நாடாக மாற்றியமைத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முஸ்லிம்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்.
பாலமுனை சுப்பர் ஓர்கிட் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வு சின்னப்பாலமுனை அல்-ஹிக்மா மைதானத்தில் கடந்த வௌ்ளிக்கிழமை (02), சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஜே.அமீன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்வாறு தெரிவித்த,பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்,
‘எமது நாடு வளமிக்க தேசமாக இருந்த கால கட்டத்தில் பல சவால்கள் காணப்பட்டசூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறுகிய ஆட்சிக் காலத்தில் நல்ல சூழ்நிலை உருவாகி உள்ளதை அனைவரும் அறிவீர்கள்.
நாட்டுக்காக அரும் பணியாற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் நன்றியுடையவர்களாக விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்கு கூடுதலான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிதி மூலம் எமது பிராந்தியத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை மீட்டெடுத்து, சிறிய காலத்திற்குள் அபிவிருத்தி பாதைக்கு கொண்டு சென்றுள்ள பெருமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து, இருளில் மூழ்கியிருந்தபோது நாட்டை மீட்டெடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. நாடும், சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இந்த நாட்டை மீட்டெடுத்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டுச்சென்று மீள கட்டியெழுப்பியுள்ளார்.
கடந்த காலங்களில் பிராந்திய சிறுபான்மை விளையாட்டு வீரர்கள் தேசிய ரீதியில் விளையாட்டுத் துறைக்கு உள்வாங்கப்படாத நிலை காணப்பட்டது.
தற்போது அந்த நிலை மாறி எமது விளையாட்டு வீரர்கள் தேசிய ரீதியில் சாதனை படைத்து வருகின்றார்கள். எந்த விடயத்தையும் சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு சிறந்த திட்டமிடல்கள் அவசியமாகும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.