நாட்டு மக்கள் கடந்த இரு வருடங்களாக அனுபவித்து வருகின்ற துன்பங்களை யாழ். மாவட்ட மக்கள் பத்து வருடங்களாக அனுபவித்து வருகின்றனர் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடைய அலுவலகத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன், பாராளுமன்றத்தில் அளப்பரிய பணியாற்றுவது போலவே யாழ்ப்பாண மாவட்டத்திலும் சிறந்த மக்கள் சேவையை முன்னெடுத்து வருகிறார். அவர் எப்போதும் யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டம் குறித்து சிந்தித்து அவற்றை மேம்படுத்த உழைத்து வருகிறார்.
எமது நாடு வங்குரோத்து நிலையை அடைந்து தற்போது அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. இதுபோன்ற ஓர் நிலைமை இதுவரை ஏற்பட்டதில்லை. டொலரின் பெறுமதி 370 ரூபாய்க்கும் அதிகமாக சென்றதனை யாரும் கண்டதில்லை. இறுதியில் கொழும்பு அரசாங்கம் கூட இல்லாமல் போனது.
எதிர்க்கட்சி தலைவர் அவர்களை அரசாங்கத்தை பொறுப்பெடுக்கக் கோரிய போது ஓடினார். ஜே.வி.பி தலைவரை அப்போது தேடக்கூட முடியாத நிலை இருந்தது.
சிந்தித்துப் பாருங்கள் எந்த நாட்டில் அதிகாரத்தைக் கொடுக்கும் போது தலைவர்கள் தப்பித்து ஓடுவார்கள் என்று.
அவர்களிடம் பிரச்சினைக்கான தீர்வுகள் இருக்கவில்லை. இறுதியாக பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த எனக்கு இந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை ஓர் உலக சாதனை என்றே நினைக்கின்றேன்.
தற்போது நாம் வங்குரோத்து நிலைமையில் இருந்து மீண்டு வருகிறோம். எமது வேலைத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக இருப்பதாக ஜப்பான் அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. ஏனைய நாடுகளும் இவ்வாறு பகிரங்கமாக அறிவிக்கும் போது கஷ்டமான இருண்ட யுகம் நிறைவுக்கு வரும். I.M.F ஸ்தாபனத்துடனான உடன்படிக்கையை நாம் 2032ஆம் ஆண்டு வரை கொண்டு செல்ல வேண்டும். அதனை மாற்ற முயற்சித்தால் எமக்கு ஒரு சதம் பணம் கூட கிடையாது.
ஆனால் சிலர் நாம் அந்த உடன்படிக்கையை மாற்றப்போகிறோம் என கூறி வருகின்றனர். அவ்வாறு முயற்சித்தால் எல்லாமே பிழைத்துப்போய்விடும். தற்போது உள்ள நிலைமை மாறி மீண்டும் இருண்ட யுகத்திற்குள் சென்று விடுவோம்.
அன்று போல் வாழ்க்கை கடினமானதாகவும் இல்லை ஆனால் வாழ்வது எளிதான ஒரு விடயமும் இல்லை. எவ்வாறு இருப்பினும் எஞ்சிய தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. எமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை நாட்டிற்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய பணம் இல்லை. கடன்களையே பெறுகிறோம். கடனை மீளச் செலுத்தவும் பணம் இல்லை. நாம் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி நகரவேண்டியுள்ளது. புதிய ஏற்றுமதி பொருட்கள் மற்றும் சேவைகளை இனங்காண வேண்டியுள்ளது. எதிர்வரும் 5 வருடங்களில் இத் திட்டத்தில் வெற்றி கண்டால் நாடு சிறந்த ஓர் நிலையை அடையும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)