இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறந்தது முதல் ஆறு மாத காலப்பகுதிக்கு தாய்ப்பால் மாத்திரம் ஊட்டப்பட்ட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தாய்ப்பாலுக்கு ஈடாக எந்தவொரு போஷாக்கு உணவும் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குக் கிடையாது. அதன் காரணத்தினால் தான் தாய்ப்பால் ஊட்டல் ஊக்குவிக்கப்படுகிறது.
பொதுவாக ஒவ்வொரு தாய்மாருக்கும் நாளொன்றுக்கு 600 மில்லி முதல் 1000 மில்லி வரை தாய்ப்பால் சுரக்க முடியும். பருமனானவர், ஒல்லியானவர் என்றெல்லாம் எந்தப் பாகுபாடும் இதில் இல்லை.
குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான முக்கியப் புரதமான லாக்டல்புமின் (lactalbumin) தாய்ப்பாலில் தான் உள்ளது. இது ஏனைய பிற மாற்றுப் பொருட்களில் இருக்காது.
குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா, வயிற்றோட்டம், சளி, காய்ச்சல் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தக்கூடியதும் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கக்கூடியதுமான திறன் இதற்குள்ளது. தாய்ப்பால் அருந்தும்போது குழந்தையின் நா, வாய் போன்றவை அசைந்து செயற்படும். புட்டிப்பாலை பயன்படுத்தும்போது, அது குழந்தைகளின் நோயெதிர்ப்புச்சக்தியை குறைத்துவிடலாம். மார்பகத்தில் இருந்து நேராக பால் புகட்டும்போது தாய்க்கும் சேய்க்குமான அன்பு உறவு வளரும். குழந்தை பாதுகாப்பாக இருப்பதாக உணரும்.
தாய்ப்பாலைத் தவிர பிற மாற்றுப் பொருட்களையும் குழந்தையால் எடுத்துக்கொள்ள இயலும். ஆனால் பசுப்பால் போன்ற மாற்றுப் பொருட்களில் உள்ள உப்புச்சத்துகள் போன்றவை குழந்தைகளின் இளம் சிறுநீரகத்துக்கு செறிவுமிக்கதாக இருக்கலாம். அதன் ஊடாக குழந்தைகளுக்கு சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தான் குழந்தைகளுக்கு 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கட்டாயம் என வலியுறுத்தப்படுகிறது.
தாய்ப்பால் தவிர்ந்த பிற பொருட்களை வழங்குவது குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. அதனால் உலக தாய்ப்பாலூட்டல் வாரத்தையொட்டி இலங்கையிலும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.