காஸாவில் சுமார் பத்து மாதங்களாக யுத்தம் இடம்பெற்றுவரும் சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இஸ்மாயீல் ஹனியே கடந்த புதனன்று அதிகாலையில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்த சில மணித்தியாலயங்களில் ஹிஸ்புல்லாஹ்வின் இரண்டாவது தளபதி புவார்ட் சுஹுர் லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் கொல்லப்பட்டார். அதிலும் இஸ்மாயீல் ஹனியே ஈரானின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு வைபவத்தில் விஷேட விருந்தாளியாகக் கலந்து கொண்ட சமயத்தில் கொல்லப்பட்டிருக்கிறார்.
‘இப்படுகொலைக்கு இஸ்ரேலே பொறுப்பு’ என்று குற்றம் சாட்டியுள்ள ஈரான் ‘தமது நாட்டின் விருந்தாளியைப் படுகொலை செய்துள்ளமைக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும். அது ஈரானின் கடமை’ என அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமெனெய் கூறியுள்ளார்.
இந்நிலையில் மத்திய கிழக்கில் உச்ச கட்ட போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் இஸ்ரேல், லெபனான் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை பல நாடுகளும் இடைநிறுத்தியுள்ளன. லெபனானிலுள்ள தம் பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுமாறு பல நாடுகளும் அறிவுறுத்தியுள்ளன. இதேவேளை அமெரிக்க யுத்த கப்பல்களும் யுத்த விமானங்களும் மத்திய கிழக்கு நோக்கி விரைந்துள்ளளன.
இந்த சூழலில் இஸ்ரேல், லெபனான், ஜோர்தான் ஆகிய மூன்று நாடுகளிலும் பணியாளர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இலங்கையர் குறித்து அவர்களது உறவினர்கள் கூடுதல் கவனம் செலுத்தும் நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லெபனானில் உள்ள இலங்கை தூதரகம், ‘லெபனானில் பணியாற்றும் இலங்கையர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தேவையற்ற அச்சங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளது.
இலங்கையின் லெபனான் நாட்டுத் தூதுவர் கபில ஜயவீர, ‘லெபனானில் 7600 க்கும் மேற்பட்ட இலங்கையர் பணியாளர்களாக உள்ளனர். அவர்களில் சுமார் 25 பேர் யுத்தம் நிலவும் பிரதேசங்களில் இருக்கின்றனர். என்றாலும் எமது நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் உச்சபட்ச கவனம் செலுத்தி செயற்பட்டுள்ளதாகவும் அதன் நிமித்தம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தேவையற்ற நடமாட்டங்களையும் மக்கள் கூடும் இடங்களில் தங்குவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றுள்ளார்.
இதேவேளை இஸ்ரேலிலும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர் பணியாளர்களாக உள்ளனர். அவர்களது நலனகள் குறித்தும் கூடுதல் கரிசனை செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நிமல் பண்டார, இஸ்ரேலில் இருந்து டுபாய், அபுதாபி, புதுடில்லி ஊடாக கொழும்புக்கு பயணிப்பதற்கான விமானங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்னர், நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
மேலும் ஜோர்தானில் 15 ஆயிரம் இலங்கை தொழிலாளர்கள் உள்ளனர். எகிப்தில் கிட்டத்தட்ட 500 பேர் இருக்கின்றனர். இவை தவிர, மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளிலும் பெருந்தொகையான இலங்கையர் தொழிலாளர்களாக உள்ளனர். என்றாலும் தற்போது உச்சபட்ச போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நாடுகளில் உள்ள பணியாளர்களின் நலன்கள் குறித்து அந்தந்த நாடுகளில் கடமையாற்றும் தூதுவர்கள் ஊடாக உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் மத்திய கிழக்கில் யுத்தம் மூளும் நிலை ஏற்படுமாயின் அங்கு பணியாளர்களாக உள்ள இலங்கையரை பாதுகாப்பாக நாட்டுக்கு திரும்பவும் அழைத்து வருவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் நிமித்தம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இஸ்ரேல், லெபனான், ஜோர்தான் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாதிருப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
மக்களின் நலன்கள் குறித்து கவனம் செலுத்திவரும் அரசாங்கம் என்ற வகையில் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நாட்டு பிரஜைகள் உள்நாட்டிலோ தொழில்புரியும் நாடுகளிலோ பாதிப்புகளுக்கோ அசௌகரியங்களுக்கோ உள்ளாகிவிடக்கூடாது என்பதில் அதிக கரிசனை எடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பின்னணியில் தான் இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனால் அந்தந்த நாடுகளில் பணிபுரியும் இலங்கையர் அந்தந்த நாடுகளிலுள்ள தூதரகங்கள் ஊடாக வழங்கப்படும் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுவது அவசியம். அத்தோடு உள்நாட்டவர்களும் எரிபொருள் மற்றும் எரிவாயு பயன்பாட்டையும் பொறுப்புடன் மேற்கொள்ளவும் தவறலாகாது.
தற்போதைய சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளிலும் அறிவுறுத்தல்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதுவே குடிமக்களின் பொறுப்பாகும்.