Wednesday, September 11, 2024
Home » “அறிவெழுச்சி”: பெருந்தோட்ட ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பம்

“அறிவெழுச்சி”: பெருந்தோட்ட ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம் ஆரம்பம்

by Rizwan Segu Mohideen
August 5, 2024 7:06 pm 0 comment

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் இணைந்து நடாத்தும் பெருந்தோட்டத் துறையின் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம் அறிவெழுச்சி (வித்யார்வதன – Vidhyawardana) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஒழுங்குப்படுத்தலுடன் இந்த நிகழ்வானது இன்றைய தினம் (05) அலரிமாளிகையில் நடைபெற்றது.

மேலும் இந்த ஆரம்ப நிகழ்வில் மத்திய, ஊவா, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலுள்ள சுமார் 2000 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உதவி உயர் ஸ்தானிகர் காலாநிதி சத்யாஞ்சல் பாண்டே, தேசிய கல்வி நிறுவக பொது பணிப்பாளர் பேராசிரியர் பீரசாத் சேதுங்கல், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, கல்வி அமைச்சின் செயலாளர், அமைச்சு அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்த ஆசிரிய பயிற்றுனர்கள், மற்றும் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த 1000க்கும் அதிகமான ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்,

2023 ஜூலையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகத்தினர் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் முகமாக STEM பாடங்களை  (பௌதீகவியல், இரசாயனவியல், கணிதம், ஆங்கிலம் ,மற்றும் உயிரியல்) கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றுக்காக  இந்திய அரசாங்கத்தின் பல் நோக்கு நன்கொடை உதவி திட்டத்தின்கீழ் 750 மில்லியன் இந்திய ரூபா அறிவிக்கப்பட்டதுடன் இத்திட்டம் தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் பயிற்சித் திட்டத்தின் ஆதரவின் கீழ் STEM பாடவிதான பயிற்சிகளை வழங்குவதற்காக அத்துறையில் நிபுணத்துவம் பெற்ற 19 ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து 2024 ஜூலை 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கையின் கல்வி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு ஆகியவை 22 ஜூலை முதல் 02 ஓகஸ்ட் வரை நடத்திய வழிகாட்டுகை அமர்வுகளில் அவர்கள் கலந்துகொண்டிருந்தனர். இந்த அமர்வுகளில் இரு அமைச்சுகளின் சிரேஸ்ட அதிகாரிகளுடனான உரையாடல், மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள ஆறு பாடசாலைகளுக்கான கள விஜயங்கள், தேசிய கல்வி நிறுவகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைக்கப்பட்ட தெளிவூட்டல் அமர்வு ஆகியவையும் உள்ளடங்கியிருந்தன. 29 ஜூலை நடைபெற்ற தெளிவூட்டல் அமர்வின் ஆரம்ப நிகழ்வில் கல்வித் துறை இராஜாங்க அமைச்சர் கௌரவ அ அரவிந் குமார் அவர்களும் கல்வி அமைச்சு மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் அதிகாரிகளும் உரை நிகழ்த்தியிருந்தனர். இந்த வழிகாட்டுகை செயற்பாடுகளின் முக்கிய இலக்குகளாக, பாடவிதான மீளாய்வு, இத்திட்டத்தின் மனிதவள மற்றும் உட்கட்டமைப்பு தேவைகள் குறித்த ஆழமான புரிதலை அடைதல், திட்டத்தின் பெறுபேறுகள் குறித்த எதிர்பார்ப்பு, இலங்கை கல்வித் திட்டம் குறித்த புரிதல், கற்பித்தல் முறைமைகள் மற்றும் நுட்பங்கள்  குறித்த புரிதலை அடைதல், இந்திய பாடத்திட்டத்தில் உள்ள வேறுபாடுகளைக் கண்டறிதல் மற்றும் வெற்றிகரமான திட்டத்தை உறுதி செய்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகளை உருவாக்குதல் மற்றும் அத்திட்டத்திலிருந்து கிடைக்கப்பெறும் ஸ்திரமான பலன்கள் ஆகியவற்றைக் கண்டறிதல்  போன்ற விடயங்கள் காணப்பட்டிருந்தன.

இந்த 10 வாரகால ஆசிரிய பயிற்சி திட்டத்திற்காக பெருந்தோட்ட பாடசாலைகளில் குறித்த ஆசிரியர்கள் தமது சேவைகளை வழங்கவுள்ளனர். பிராந்தியங்களில் உள்ள பாடசாலைகளின் தேவைகளை அடிப்படையாகக்கொண்டு குறித்த இந்திய ஆசிரியர் பயிற்றுனர்கள் குழாமை உரிய வகையில் பயன்படுத்துவதற்காக ஒரு வினைத்திறன் மிக்க திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள 40 நிலையங்களில் இந்த ஆசிரியர்களால் பயிற்சி அமர்வுகள் நடத்தப்படும் அதேவேளை மேல், தெற்கு மற்றும் வட மேல் மாகாணங்களில் உள்ள சில நிலையங்கள் மெய்நிகர் மார்க்கமூடாக இந்த அமர்வுகளில் இணையவுள்ளன. இந்த திட்டத்தின் வெற்றிகரமான நிறைவின்போது பெருந்தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இதன் மூலமாக பயனடைவார்கள். 

கல்வி, வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், வாழ்வாதாரம், புதுப்பிக்கதக்க சக்தி, துறைமுகம், ரயில்வே, மற்றும் ஏனைய பல துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இலங்கை அரசினால் பரிதுரைக்கப்படும் முன்னுரிமைகள் மற்றும் இலங்கை மக்களின் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் இலங்கையில் மக்களை இலக்காகக் கொண்டும் இந்தியாவினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பங்குடைமை முயற்சிகளின் நீண்ட பட்டியலில் குறித்த பயிற்சித்திட்டமும் உள்வாங்கப்படுகின்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் காலங்களில் அமைச்சர்கள் பங்குகொள்ளும் நிகழ்வுகளுக்கு தேர்தல்கள் ஆனைக்குழு தடை விதித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முன்மாதிரியாக செயற்பட்டு இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துகொள்ளவில்லை.

ஆகவேதான் இந்நிகழ்வு தொடர்பான ஊடக சந்திப்பொன்றை கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சில் ஏற்பாடு செய்திருந்தார்.

தொடர்ந்து ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

மலையக பாடசாலை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்தியாவில் இருந்து 19 ஆசிரியர்கள் வருகைத்தந்துள்ளனர்.இவர்களின் ஊடாக மலையக பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில் பயிற்சிகள் வழங்குவதற்கு இவ் ஆசிரியர்கள் வருகைத் தந்துள்ளனர்.

அத்தோடு முதல் தடவையாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் இடம்பெறுகின்றனர். அதனைதொடர்ந்து பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கும் தொடர்ந்தும் மூன்று மாதகாலம் பயிற்சிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மலையக பாடசாலை மாணவர்கள் 30 சதவீத கல்வியே பெருகின்றனர் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினோம்.

இதேவேலை எமது நாட்டின் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த மற்றும் எனது அமைச்சின் செயலாளர், அதிகாரிகள் அனைவருக்கும் இவ்வேலையிலே நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என கருத்துறைத்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x