Wednesday, September 11, 2024
Home » மட்டக்களப்பில் செந்தில், வியாழேந்திரனிடம் ஆதரவு கோரிய ஜனாதிபதி

மட்டக்களப்பில் செந்தில், வியாழேந்திரனிடம் ஆதரவு கோரிய ஜனாதிபதி

- எதிர்கால திட்டங்கள் குறித்தும் தெளிவூட்டல்

by Prashahini
August 5, 2024 3:48 pm 0 comment

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களிடம் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி வைத்துள்ள எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை தெளிவூட்டியதுடன், நாட்டை கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் என்னவென்று கேட்டறிந்தார்.

மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். எதிர்காலத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிப்பதாகவும், IMF கடன் மறுசீரமைப்பின் ஊடாக 2035 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட உள்ள வேலைத்திட்டங்கள் குறித்து தெளிவூட்டினார்.

இக்கலந்துரையாடல் நிறைவின் போது இதொகா தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானிடம் கிழக்கிலும் மலையகத்திலும் ஆதரவு கோரினார். மலையகத்தை தாண்டி கிழக்கிலும் மலையக தலைவர் ஒருவரிடம் ஜனாதிபதி ஆதரவு கோரியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் உள்ள மூவின மக்களில், ஒரு சமுதாயத்திற்கும் இன்னுமொரு சமுதாயத்திற்கும் இடையில் கடும் முரண்பாடுகள் இருந்த சூழ்நிலையில், தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட கூடாது என செந்தில் தொண்டமானின் நியமனத்திற்கு எதிராக சிங்கள மக்கள் கடும் எதிர்ப்புடன் கூடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் இவ்வொருவருடத்திற்குள் சிங்கள மக்கள் மனதை வென்று தற்போது சிங்கள மக்களின் பல நிகழ்வுகள் செந்தில் தொண்டமான் தலைமையிலே நடத்தப்பட்டு வருகின்றது.

சிங்கள மக்களை போன்று முஸ்லிம் மக்களும் ஆளுநர் மாற்று இனத்தவர் என ஆரம்பத்தில் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வந்தனர்.

முஸ்லிம் மக்களுக்கு தேவையான நியாமாக பெற கூடிய அனைத்து வேலைத்திட்டங்களையும் பாகுப்பாடு இன்றி ஆளுநர் முன்னெடுத்ததை அடுத்து, கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் முறையாக காத்தான்குடியில் ஆளுநர் நடத்திய இப்தார் நிகழ்வில் 5000 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்துக் கொண்டு இப்தாரை சிறப்பித்து ஆளுநருடன் இணைந்து பயணிப்பதை வெளிப்படுத்தினர். அதேபோல கிழக்கு தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படாததால், ஆரம்பத்தில் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பில்லாத நிலையே காணப்பட்டது.

பொங்கல் விழா, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, உலக தமிழ் கலை கலாச்சார மாநாடு, தமிழர்களுக்கான காணி வழங்கல் ,தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது என தமிழர்களுக்காக மேற்கொண்ட பல வேலைத்திட்டங்கள் தமிழர்கள் மத்தியில் பெரும் ஆதரவை ஏற்படுத்தியது. இவ்வாறு மூவின மக்களையும் சரிசமமாக நடத்தி கிழக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு தலைவராக ஆளுநர் செந்தில் தொண்டமான் உருவெடுத்துள்ளார்.

மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைமைகள் மத்தியிலும் ஆளுநருக்கான ஆதரவு வலுப்பெற்றது. முன்னாள் முதலமைச்சரும், கெபினட் அமைச்சருமான நசீர் அஹமட்க்கும், ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் முறுகல் நிலையின் போது, கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநருக்கு ஆதரவாக நின்றது முழு இலங்கையும் அறிந்த விடயமாகும். ஆளுநருக்கு மக்கள் மத்தியில் மட்டுமன்றி அரசியல் மட்டத்திலும் பெரும் வரவேற்பு காணக்கூடியதாக இருந்தது.

ஏனைய ஆளுநர்களை விட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒருபடி மேலாக அனைத்து துறைகளிலும் வேலைத்திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்துள்ளார் என்பதை நன்கு அறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு செந்தில் தொண்டமானின் ஆதரவை கோரியுள்ளார் என அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் சமூக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மலையகத்தை தாண்டி கிழக்கிலும் மலையக தலைவர் ஒருவரிடம் ஜனாதிபதி ஆதரவை கோரிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x