ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் காலம் இன்று (05) நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்பாக விண்ணப்பப்பத்திரங்கள் குறித்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் இன்றைய தினம் விண்ணப்பங்களை தபாலிடல் அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதற்கு காரணமாக அமையாது என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற வுள்ளது. அந்த வகையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக நேற்று வரை 14 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் மேலும் ஒரு அரசியல் கட்சியும் 5 சுயாதீன வேட்பாளர்களும் இவ்வாறு கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொறுப்பேற்கும் காலம் ஜூலை 26 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வழங்கப்பட்டுள்ளது.
அதே வேளை,ஆகஸ்ட் 15 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் முற்பகல் 11:30 மணிவரை வேட்புமனு தாக்கல் இடம் பெற வுள்ளது. அந்த காலத்துக்குள்ளேயே ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆணுக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்