பொருளாதாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் மற்றும் கொள்கையை மாற்றினால், மீண்டும் நாடு பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்பதே சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாடு என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை தொடர்பில், தெளிவுபடுத்தும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பீற்றர் ப்ரூவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி காலாண்டுக்குக் காலாண்டு முன்னேற்றமடைவது தொடர்பில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்தல் தொடர்பிலும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரித்தல் தொடர்பிலும் அவர் தமது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சில தரப்பினர் வெளியிடும் கூற்றுக்கள் தொடர்பில், அவதானமாக செயற்படுவது அவசியம் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்