கட்சிக்கு மீண்டும் திரும்பும் எவருக்கும் கட்சியின் கதவு திறந்தே இருக்கும் என, பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கட்சி ஆதரவாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் சலூன் கதவினூடாக கட்சிக்குள் உள் வரவும் கட்சியை விட்டு வெளியேறவும் முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதுபற்றி கருத்து தெரிவித்த நாமல்ராஜபக்ஷ;
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் மீண்டும் வர விரும்புவோருக்கு கதவுகள் திறந்தே உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேனவுக்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நிபந்தனையற்ற விதத்தில் செயற்பட்டார். அவர் எதிர்பார்த்த பதவியை பெற்றுக் கொடுப்பதற்காக முயற்சி செய்தார். இதனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மன வருத்தப் படும் நிலைமையும் ஏற்பட்டது. எமது செயற்பாடுகள் தூய்மையானவை. நாம் அவர்களுக்காக உச்ச அளவில் செயற்பட்டோம். எனினும் அவர்கள் தற்போது மேற்கொண்டுள்ள தீர்மானம் சரியானதா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்