ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயர் மற்றும் பதவிகளை உபயோகப்படுத்தி சிலர் கட்சியின் ஆதரவாளர்களை ஏமாற்றுவதாகவும், இவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த கட்சியின் உப தலைவர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான சட்ட ரீதியான உரிமை எமது தரப்பினருக்கே உள்ளது. எனினும் கட்சியுடன் எந்த உத்தியோகபூர்வ உரிமையும் இல்லாத தயாசிறி ஜயசேகர, விஜேதாச ராஜபக்ச ஆகியோர் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தலைவர் பதவிகளை உபயோகித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒத்துழைப்பு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் கட்சியின் நடவடிக்கைகளில் தடை ஏற்படுத்தாமல் இருக்க நீதிமன்றம் தடையுத்தரவும் பிறப்பித்துள்ளது.
இவ்வாறான நிலையிலும் கட்சி ஆதரவாளர்களை திசை திருப்பும் வகையில், இவர்கள் பதவிகளையும் கட்சியின் பெயரையும் உபயோகித்து செயற்படுவதற்கு எந்த விதத்திலும் அவர்களுக்கு சட்டபூர்வமான உத்தியோகப்பூர்வ உரிமை கிடையாது. அதற்கிணங்க அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்