அமரத்துவம் அடைந்த கங்காராம பொடி ஆமுதுரு முன்னெடுத்த சேவைகளால் அவர் சமூகப்பணிகளில் ஈடுபட்ட மிகச்சிறந்த தேரராக போற்றப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்துள்ளார். அன்னார் அமரத்துவம் அடைந்தமை குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில் தெரிவித்துள்ளதாவது: இலங்கை இளைஞர்களுக்கு தொழிலுக்கான பாதைகளையும் ஆங்கில மொழிக் கல்வியை யும் வழங்க அரும் பாடுபட்டார்.
இயற்கைச் சீற்றங்களால் அழிந்த உயிர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.
முதியோர் மையங்கள் மற்றும் பராமரிப்பு மையங்களுக்கும் இயன்றளவு உதவியவர்.
சமூக சேவைக்காக பிரித்தானிய அரசியின் கௌரவ விருதையும் இவர் பெற்றிருந்தார்.
தாய்லாந்து, ஜப்பான், தாய்வான், கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளிலும் மேற்குலக நாடுகளிலும் தேரவாத மதப் பணிகளை பிரபலப்படுத்த அவர் எடுத்து முயற்சிகள் அளப்பரியவை.
தேவையான அனைத்து வளங்களுடனும் இந்த பணிகளை அவர் தொடங்கவில்லை. நிர்வாகத் திறமையும் உறுதியும் மட்டுமே அவரிடம் இருந்தன . அந்த இரண்டு பலத்தையும் கொண்டு பல காரியங்களை அவர் சாதித்தார்.
எனவே, அவரை சிறிய துறவி என்று கூறினாலும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் மிகப்பெரிய துறவியாகவே அவரைக் கருத வேண்டும். நமது நாட்டிற்காக பல சிறந்த சமய மற்றும் சமூக சேவைகளை ஆற்றிய வணக்கத்திற்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.