வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள சௌத்போர்ட் நகரில் 3 சிறுமிகள் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 17 வயது இளையவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
பிரபல பாடகி டெய்லர் சுவிப்ட்டின் பாணியில் பிள்ளைகளுக்கு நடன வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த இளையவர் 10 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ளார்.
அவர் கடந்த வியாழக்கிழமை (01) லிவர்பூல் சிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நடன வகுப்பில் இருந்த 8 பிள்ளைகளுக்கும் 2 பெரியவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களில் பலரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
இதில் 6 தொடக்கம் 9 வயதான சிறுமிகளே கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில் சௌத்போர்ட் நகரில் ஏற்பட்ட மரணங்களுக்காக மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கலந்துகொண்ட 100க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞர் குடியேறிய கடும்போக்கு இஸ்லாமியவாதி என்று சமூக ஊடகத்தில் வதந்தி பரவியதை அடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் வெடித்தது.
எனினும் தாக்குதல் நடத்தியவர் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவரல்ல என்றும் பிரிட்டனில் பிறந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.