உலக மரபுரிமை குழுவின் 46ஆவது கூட்டத் தொடர் புதுடில்லியில் நடைபெற்ற போது அமெரிக்காவும் இந்தியாவும் கலாசார சொத்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.
அமெரிக்காவிடமுள்ள இந்தியாவின் கலாசார சொத்துக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியும் கலாசார அமைச்சின் செயலாளர் கோவிந்த் மோகனும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நிகழ்வில் மத்திய கலாசார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொண்டார்.
இந்த ஒப்பந்தம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், ‘அமெரிக்காவிலுள்ள எமது விலை மதிக்க முடியாத மரபுரிமை சொத்துக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளவும் கலாசார உறவுகளை விரிவுபடுத்தவும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும். இரு நாடுகளையும் சேர்ந்த நிபுணர்கள் சுமார் இரு வருடங்கள் மேற்கொண்ட விடாமுயற்சியின் உச்சக்கட்ட பிரதிபலனே இந்த உடன்படிக்கை’ என்றுள்ளார்.