Home » அமெரிக்கா, ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம்

அமெரிக்கா, ரஷ்யா இடையே கைதிகள் பரிமாற்றம்

by gayan
August 3, 2024 6:00 am 0 comment

அமெரிக்காவின் தலைமையில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக நடந்த இரகசிய பேச்சுவார்த்தைகளுக்குப் பின், கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஐரோப்பாவின் சிறைகளில் இருந்த எட்டு ரஷ்யக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். பதிலுக்கு ரஷ்யாவும் அமெரிக்க, ஐரோப்பிய கைதிகளை விடுவித்தது.

இந்த கைதிகள் பரிமாற்றத்தை ஒருங்கிணைத்த துருக்கி, இரண்டு குழந்தைகள் உட்பட, 10 கைதிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டதாகவும், 13 கைதிகள் ஜெர்மனிக்கும் மூவர் அமெரிக்காவுக்கும் விடுதலையாகி சென்றுள்ளனர் என்றும் அறிவித்துள்ளது. போலந்து, சுலோவேனியா, நோர்வே, பெலரஸ் ஆகிய நாடுகளில் சிறையிலிருந்த கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 26 கைதிகள் இந்த பரிமாற்றத்தால் விடுதலை ஆகின்றனர்.துருக்கியின் தலைநகரான அங்காராவிலிருந்து விமானங்களில் கைதிகள் அவரவர் நாடுகளுக்குச் சென்றனர்.

இராஜதந்திரத்திற்கும் நட்புறவுக்கும் சான்றாக நடவடிக்கை எடுத்துள்ள மேற்கத்திய அரசாங்கங்களை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டினார். நட்பு நாடுகளின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமாகியிருக்காது என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

மருத்துவ பரிசோதனைகள், ஆவண பரிவர்த்தனைகள் ஆகிய நடைமுறைகள் முடிவுற்றதும், சம்பந்தப்பட்ட கைதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு கூறியது.

மேற்கத்திய நாடுகளில் கைதான ரஷ்யர்களை நாடு திரும்பவைக்கும் எண்ணத்துடன், தமது சிறையில் இருந்த வெளிநாட்டினரை மன்னித்து விடுவிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ரஷ்யா தெரிவித்தது.

ரஷ்யா விடுவித்தோரில் அமெரிக்க பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச், முன்னாள் இராணுவ வீரர் போல் வீலன், ரஷ்ய அமெரிக்க இரட்டை குடியுரிமை கொண்ட வானொலி செய்தியாளர் அல்சு குர்மஷேவா ஆகியோர் அடங்குவர்.

ஜெர்மனி, ரஷ்யக் கைதியான வடிம் கிராசிகோவ் என்பவரை விடுவித்தது. ரஷ்யாவை விட்டு நாடு கடந்து ஜெர்மனியில் குடியேறிய செச்னியர் ஒருவரைக் கொன்ற குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர் தண்டனை அனுபவித்து வந்தார்.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் முன்னர் நடந்த பனிப்போர் காலத்துக்குப் பின்னர் நடந்துள்ள பெரிய அளவிலான கைதிகள் பரிமாற்றம் என்று இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x