சமூக சிற்பிகள் சங்கத்தின் மாணவ, மாணவிகள் சிலர் அண்மையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
சமூக சிற்பிகள் சங்கத்தால் ‘ஜனநாயகத்தின் ஆரம்பம்’ எனும் தொனிப்பொருளில் சிறுவர் நிழல் பிரதேச சபைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் 10 மாவட்டங்களிலுள்ள 57 கிராமங்களின் 11 வயது முதல் 15 வயதுவரையான சிறுவர்கள் இந்த சிறுவர் நிழல் பிரதேச சபைகளில் உள்ளடங்குகின்றனர். இதுவரை 10 மாவட்டங்களில் 19 சிறுவர் நிழல் பிரதேச சபைகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இங்கு வருகை தந்த மாணவ, மாணவிகளுக்கு தமது பிரதேசங்களில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் நேரடியாக சபாநாயகரிடம் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது. இதன்போது சபாநாயகர் அந்த சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கியதுடன், சிக்கல்களை ஆராய்ந்து தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு முன்வைப்பதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
அத்துடன் பாராளுமன்ற முறைமை தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, மாணவர்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தினார்.
இங்கு கலந்துகொண்ட மாணவ, மாணவிகள் பாராளுமன்றத்தை பார்வையிட்டதுடன், இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, சமூக சிற்பிகள் சங்கத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.