மாலைதீவு ஜனாதிபதி முய்சு ஏற்கனவே இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியா குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.
மாலைதீவு அதிபராக முகமது முய்ஸு பதவியேற்றதிலிருந்து பல விவகாரங்களினால், உலக மக்கள் மனதில் பதிந்துவிட்டார். குறிப்பாக இந்திய மக்கள் மனதில் என்று சொல்லலாம்.
இவர் பதவியேற்ற காலத்திலிருந்து சீனாவிற்கு ஆதரவாகவும் இந்தியாவிற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார். முதலில் மாலைதீவில் இருக்கும் இந்திய இராணுவ வீரர்களை உடனே வெளியேறும்படி கூறினார். அதுவும், அந்த வீரர்கள், மாலைதீவுக்கு கொடுக்கப்பட்ட ஹெலிெகாப்டர்களை இயக்குவதற்கு உதவியாக இருந்த வீரர்களே.
பின்னர் ஒருமுறை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்ற போது, முய்ஸுவின் கட்சியில் உள்ள அமைச்சர் ஒருவர் அவதூறாக கருத்துக் கூறினார். அதுமுதல், இந்திய மக்கள் பலர் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதையே விட்டுவிட்டனர்.
மேலும் இந்தியாவுடன் போடப்பட்ட ‘ஹைட்ரோகிராஃபிக் சர்வே’ ஒப்பந்தத்தை புதுப்பிக்க போவதில்லை என்றும் மாலைதீவு அறிவித்திருந்தது. அதாவது மாலைதீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வை நடத்துவதே ‘ஹைட்ரோகிராஃபிக் சர்வே’ ஒப்பந்தமாகும்.
இதைவிட முக்கியமான ஒன்று, சீனா உளவு கப்பல்களை மாலத்தீவில் சுற்றவிட, தொடர்ந்து அனுமதி அளித்து வருகிறது.
இப்படியான நிலையில்தான். பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றபோது, முதல் வரிசையில் முய்சுவிற்கு இடமளிக்கப்பட்டது.
அதேபோல், அடுத்து நடைபெற்ற விருந்திலும், நரேந்திர மோடி பக்கத்தில் முய்சு அமர்ந்திருந்தார். இது இருநாடுகளுக்கும் இடையே நட்புறவை ஏற்படுத்துவதன் முயற்சியாக இருந்தது.
இந்தச் சமயத்தில், திடீரென்று மீண்டும் முய்சு இந்தியா குறித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. மாலைதீவின் 59வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய முய்ஸு,
“மாலத்தீவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற்றப்பட்டதன் மூலம், பாதுகாப்பு இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையை நாம் எடுத்திருக்கிறோம். சீருடையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளிநாட்டுப் படையினர் மாலைதீவில் இருக்க மாட்டார்கள் என நான் உத்தரவாதம் அளிக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
அவரது இப்பேச்சு இந்தியாவை எரிச்சலடையச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.