நேட்டோ தனது 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ேவாஷிங்டனில் ஜூலை 8 முதல் 11 வரை மூன்று நாள் உச்சிமாநாடு நடத்தியது. இவ்விழாவின் போது நேட்டோ தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் முக்கிய விடயமாக உக்ரைனுக்கான இராணுவ உதவி அமைந்தது. உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் நேட்டோ உறுப்பினருக்கான ‘திரும்ப முடியாத’ (Irreversible Path) பாதையில் இருப்பதாக அதிகாரபூர்வமாக இம்மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இராணுவ உதவியாக குறைந்தபட்சம் 43 பில்லியன் ெடாலர் வழங்க நேட்டோ உறுதியளித்தது.
இந்த மாநாடு நடைபெறும் வேளையில், ஜேர்மனியில் அமெரிக்க ஏவுகணைகள் நிலைநிறுத்தப்படுவது பனிப்போர் திரும்புவதைக் குறிக்கிறது என்று ரஷ்யாவும் கூறியுள்ளது.
2024 இல் ஒவ்வொரு நேட்டோ நாடும் அதன் இராணுவத்திற்காக எவ்வளவு செலவழிக்கிறது என்பதை யாரும் அறிந்தால் அதிர்ந்து போய்விடுவார்கள்.
உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியின் 32 உறுப்பினர்கள் இந்த ஆண்டு 1.47 ட்ரில்லியன் ெடாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேலும் 2% ஆக உயர்த்த நேட்டோ தனது உறுப்பினர்களை வேண்டுகிறது.
1949 இல் நேட்டோ உருவாக்கத்தின் பின்னர், இடதுசாரி நாடுகளில் ஒரு எதிர்ப்புரட்சிக் கொள்கையைப் பின்பற்றியது. அமெரிக்கா, பிரான்ஸ் பிற நேட்டோ நாடுகள் குறிப்பாக இந்தோனேசியா, கொரியா, அல்ஜீரியாவில் காலனித்துவ போர்களை நடாத்தியும் வந்தது.
அதன் பின்னர் நேட்டோ பின்னர் கிரீஸ் மற்றும் துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்புகளை ஆதரித்ததோடு, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி தேசியவாத அரசாங்கங்களுக்கு எதிரானவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்தது.
அத்துடன் பனிப்போரின் ஆரம்ப காலத்தில், அணு ஆயுதப் போரை ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் கிழக்கு ஐரோப்பாவை பயமுறுத்தி வைத்தனர். எவ்வாறாயினும், அமெரிக்க அரசு தனது நீண்டகால இலக்கான சோவியத் ஒன்றியத்தை அழிப்பதை ஒருபோதும் கைவிடவில்லை. இறுதியில் பனிப்போர் 1991 இல் முடிவுக்கு வந்தது. சோவியத் ஒன்றியத்தில் 1917 ஒக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சோசலிச நடைமுறையை கலைத்து, முதலாளித்துவத்தை மீட்டெடுத்து, வார்சா ஒப்பந்தத்தையும் சோவியத் யூனியன் கலைத்தது. சோவியத் யூனியனால் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆபத்துடன் தனது இருப்பை எப்போதும் நியாயப்படுத்தி வந்த நேட்டோ, பனிப்போரின் பின்னர் தன்னைக் கலைக்கவில்லை. மாறாக மேலும் அதீதமாகவே வளர்ந்தது.
நேட்டோவின் 75வது ஆண்டு நிறைவு மாநாட்டில் ஸ்பெயின் பிரதமர் நேட்டோ அமைப்பு காசா, உக்ரைன் மீதான இரட்டைத் தரத்தை தவிர்க்க வேண்டும் என கோரினார். காசா போரில் பல நேட்டோ நாடுகள் இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.
2006 ஆம் ஆண்டில், நேட்டோ கூட்டணியின் இராணுவத் தயார்நிலையை உறுதி செய்வதற்காக, அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) குறைந்தபட்சம் 2 சதவீதத்தை பாதுகாப்புச் செலவீனங்களுக்கு வழங்க, கூட்டணியின் பாதுகாப்பு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.
தற்போது, அதன் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் இந்த உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளனர்.
ஒவ்வொரு நேட்டோ உறுப்பினரும் இந்த இராணுவ கூட்டணிக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை அறிந்தால் உலகே அதிர்ந்துவிடும். மேலும் இந்த ஆண்டு பாதுகாப்புக்காக 1.47 ட்ரில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளனர்.
உலகிலேயே அதிக இராணுவச் செலவு செய்யும் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. நேட்டோ நாடுகளின் வருடாந்த பாதுகாப்பு செலவினங்களில் மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இது 967 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் அடுத்த நான்கு வருடாந்த பாதுகாப்பு செலவினங்களில் ஜெர்மனி 97.7 பில்லியன் ெடாலர் செலவிடுகிறது. அதன்பின் இங்கிலாந்து 82.1 பில்லியனையும், பிரான்ஸ் 64.3 பில்லியனையும், போலந்து 34.9 பில்லியனையும் முறையே செலவிடுகின்றன.
2014 உடன் ஒப்பிடும்போது, லாட்வியா, லிதுவேனியா மற்றும் ஹங்கேரி ஆகியவை பாதுகாப்பு செலவினங்களில் மிகப்பெரிய சதவீத அதிகரிப்பைக் கொண்டுள்ளன. லாட்வியா மற்றும் லிதுவேனியா தங்கள் செலவினங்களை 300 சதவீதத்திற்கும் மேலாக உயர்த்தியுள்ளன மற்றும் ஹங்கேரி பாதுகாப்பு செலவினங்களை 225 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவில் அதிகரிக்கும் நேட்டோவின் இராணுவ மேலாண்மை மீளும் பனிப்போரின் அடையாளம் என ரஷ்யா மட்டுமின்றி, பல அரசியல் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.
நேட்டோவின் 75வது ஆண்டின் நிறைவில் சாதித்ததும் – சந்தித்ததும் எனப்பார்த்தால் முடிவற்ற பதிலே கிடைக்கும். ஆதிக்க மேலாண்மையால் தேவையற்ற பனிப்போருக்கு ஐரோப்பா முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
–ஐங்கரன் விக்கினேஸ்வரா…?