தமிழகத்தில் அரசியல் தொடர்புடைய பிரமுகர்கள் எட்டு பேர், ஒரே மாத காலத்தினுள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3 ஆம் திகதி சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி காமராஜர் நகரைச் சேர்ந்த சண்முகம் (62) கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். அ.தி.மு.கவில், கொண்டலாம்பட்டி பகுதி செயலராக அவர் இருந்தார்.
கஞ்சா விற்பனைக்கு எதிராகச் செயற்பட்டதால், தி.மு.கவைச் சேர்ந்த சேலம் மாநகராட்சியின், 55 ஆவது வார்ட் கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்ளிட்டோரால் சண்முகம் கொல்லப்பட்டதாக பொலிசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொலைக்கான இரத்தம் காய்வதற்குள், அடுத்த நாள் மயிலாடுதுறை மாவட்டம், நடராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ராஜேஷ்(26) இரவு நேரத்தில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். தப்பித்து ஓடக்கூட முடியாத மாற்றுத்திறனாளியான இவர் கொல்லப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியது.
இக்கொலைகளால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் 5 ஆம் திகதி சென்னை பெரம்பூரில், புதிதாக கட்டப்படும் வீட்டருகே, இரவு 7 மணியளவில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ேராங் (52) கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடியின் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ேராங் கொல்லப்பட்டதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அதன் பின்னணி சதி வலையில், அரசியல் தாதாக்களின் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
ரவுடிகளுக்கு எதிரான வேட்டையில், ரவுடி திருவேங்கடத்தை சுட்டுக் கொன்றதுபொலிஸ். இது தொடரும் என்றும், கூலிப்படையின் கொட்டம் அடக்கப்படும், அரசியல் கொலைகள் தடுக்கப்படும் என்றும் பெரிதும் பேசப்பட்டது.
அதற்கு உரம் ஊட்டும் விதமாக கடமை நேரத்தில் எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பிக்கள் கைத்துப்பாக்கியுடன் இருக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் பிறப்பித்த உத்தரவும், ரவுடிகளுக்கு பயத்தைத் தரும் என நம்பப்பட்டது.
அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில், அடுத்த ஓரிரு நாளில், 8 ஆம் திகதி திருச்சி மாவட்டம், ஜெம்புநாதபுரத்தில் தி.மு.க கிளைச் செயலர் ரமேஷ் (55) என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.
ஒரு வார இடைவெளிக்கு பின், 16 ஆம் திகதி அதிகாலையில், மதுரை தல்லாகுளம் வல்லபபாய் சாலையில், அமைச்சர் தியாராஜன் வீட்டருகே நடைப்பயிற்சி சென்ற, நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலர் பாலசுப்ரமணியன் (50) மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இவ்வாறு தொடர் கொலைகள் அரங்கேறும் சூழலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் அரசுக்கும், பொலிஸ் துறைக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பத் தொடங்கின. ஆனாலும், அரசியல் கொலைகள் தொடர்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் கடலுார் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் நவீதம் நகரைச் சேர்ந்த பத்மநாபன் (25) அதிகாலையில் காரில் வந்த கும்பலால் கொல்லப்பட்டார். இவர் கடலுார் 25 ஆவது வார்ட் அ.தி.மு.க அவைத் தலைவராக இருந்தார்.
அதேபோல சிவகங்கை அருகே, வேலாங்குளத்தில் செங்கல் சூளை நடத்தி வந்த செல்வகுமார் (52) சாத்தரசன்கோட்டை பிரதான வீதியில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இவர், பா.ஜ.கவில் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலராக பதவி வகித்து வந்தார்.
இந்தக் கொலைகளால் ஏற்பட்ட பதற்றம் அடங்குவதற்குள் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகே முவாற்றுமுகம் குன்னத்துவிளையைச் சேர்ந்த ஜாக்சன்(35) ஆறு பேர் கொண்ட கும்பலால் கொல்லப்பட்டார். இவர் திருவட்டார் நகர இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவராக இருந்தார்.
கொலையாளிகளை கைது செய்யக்கோரி திருவட்டார் – பேச்சிப் பாறை சாலையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் – எம்.எல்.ஏக்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு தமிழகத்தில், ஒரே மாதத்தில் அரசியல்கட்சிகளைச் சேர்ந்த எட்டுப் பேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.
‘இருநுாறு நாட்களில் 595 கொலைகள் அரங்கேறி உள்ளன’ என்று அ.தி.மு.க பொதுச் செயலர் பழனிசாமி கூறியுள்ளது கடும் மிரட்சியை ஏற்படுத்தினாலும், அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் நாளுக்கு நாள் கொலைக் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன.
பெரும்பாலான கொலைகள் முன்விரோதத்தால் நடத்தப்படுபவை என்பதைப் பார்க்கும்போது, யாருக்கும் தென்படாமல் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ரவுடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது புரிகின்றது.
மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு கட்டமைப்பில் இருந்த அச்சம் முற்றிலும் நீங்கி, பொலிசாரையே தாக்கும் அளவுக்கு, ரவுடிகள் வீரியம் அடைந்து விட்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது.