கல்முனை பிரதேசத்தில் காணப்படும் போஷாக்கு குறைபாடுகளின் நிலைமை தொடர்பாக தெளிவூட்டி அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் விவசாய மற்றும் கால்நடை திணைக்கள உயர் அதிகாரிகளுடனான உயர்மட்ட கலந்துரையாடலொன்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு குறித்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் விவசாய மற்றும் கால்நடை திணைக்கள உயர் அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பொதுச்சுகாதார மருத்துவ தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின், கல்முனை பிராந்தியத்தில் காணப்படும் போசாக்கு குறைபாடு அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் இதன்போது தெளிவாக விளக்கினார்.
எதிர்காலத்தில் உணவு உற்பத்தியும் உணவு உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்ப உதவிகளையும் விவசாய மற்றும் கால்நடைத் திணைக்களங்கள் வழங்குமிடத்து கல்முனை பிரதேசத்தில் போசாக்கு குறைபாட்டினை நிவர்த்தி செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கை உள்ளதாகவும் டொக்டர் றிஸ்பின் குறிப்பிட்டார்.
சுகாதார வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளின் பிரகாரம் போஷாக்கு குறைபாடுள்ள குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு கால்நடை திணைக்களத்தின் ஊடாக கோழிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் உணவு உற்பத்தியை அதிகரித்து அவர்களின் வருமானத்தை கூட்டுவதற்கான திட்டங்களும் தொடர்ச்சியாக வழங்குவதாக இதன்போது கால்நடை திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.
போசாக்குள்ள உணவுகளின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இறக்காமம் பிரதேசத்தில் சுமார் 500 ஏக்கர் காணியில் பாசிப்பயறு செய்கை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும், நிந்தவூர் பிரதேசத்தில் 4 நிறங்களைக் கொண்ட சோளச் செய்கையும் மேற்கொள்ளப்பட்டு இந்த வாரம் அறுவடை செய்யப்படவுள்ளதாகவும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
குறித்த உற்பத்தியினை நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக செய்து இந்தப் பிரதேசத்தில் உள்ள போசாக்கு குறைபாட்டினையும் வறுமையினையும் போக்குவதற்கு குறித்த இரண்டு திணைக்களங்களும் உதவுவதாக இக்கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பின்வரும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
பாடசாலைகளில் போசாக்குள்ள உணவுகளை ஊக்கப்படுத்தும் முகமாக விவசாய போதனாசிரியர்கள் ஊடாக விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடாத்துதல்.
பாடசாலைகளில் வழங்கப்படும் காலை உணவுகளில் இரண்டு தினங்கள் பசுப்பால் மற்றும் முட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளல்.
நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் பாடசாலையில் மாதிரி சிற்றூண்டிச்சாலை மற்றும் மாதிரி பாடசாலை தோட்டம் ஒன்றினையும் முதல் கட்டமாக ஆரம்பித்தல்.
போசாக்குள்ள ஆரோக்கிய உணவுகளை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய இயற்கையான உணவுகளை விற்பனை செய்வதற்கான (ஹெல போஜன) நிலையம் ஒன்றினை கரையோர பிரதேசத்தில் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என பல முக்கிய தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
எம்.ஐ.எம்.அஸ்ஹர்…?
(மாளிகைக்காடு குறூப் நிருபர்)