இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மேப்பாடி, சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்ைக 300 ஐ தாண்டுமென்று அஞ்சப்படுகின்றது.
நிலச்சரிவை தொடர்ந்து வயநாட்டில் அமைக்கப்பட்டுள்ள 88 நிவாரண முகாம்களில் 8,812 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சூரல்மலையில் உள்ள 9 நிவாரண மூகாம்களில் 1,695 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு காரணமாக நொடிப் பொழுதில் வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிெகாப்டர் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2-_3 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்காலிக இரும்பு பாலம் அமைக்கும் பணியில் இந்திய இராணுவத்தின் பொறியாளர் பிரிவு ஈடுப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்ட பிறகு முண்டக்கை பகுதியில் மீட்பு பணிகள் இன்னும் வேகம் பெறும் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். வயநாடு நிலச்சரிவில் சுமார் 100 பேர் பலி – மேலும் பலர் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்து வந்த 350 குடும்பங்கள் வசித்து வந்தன என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர், நிலச்சரிவு ஏற்பட்ட போது தோட்டத்தில் வேலை முடித்து அவர்களது கூடாரங்களில் உறங்கி கொண்டிருந்தவர்கள் ஆவர்.
மீட்புப் பணிக்கு தயார் நிலையில் இருக்கும் கூடுதல் இராணுவ வீரர்கள் தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து இந்திய இராணுவம் வயநாடு நிலச்சரிவு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. முண்டகை கிராமத்தில் இருந்து ஏறத்தாழ 150 பேர் மீட்கப்பட்டு மருத்துவ உதவி அளிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
ஏற்கனவே 225 இராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக 140 வீரர்கள் திருவனந்தபுரத்தில் தயார் நிலையில் உள்ளனர். தேவை ஏற்படும் பட்சத்தில் இவர்கள் விமானம் மூலம் குறுகிய கால அறிவிப்பில் அனுப்பப்படுவார்கள் என இந்திய இராணுவம் கூறியுள்ளது.