இலங்கை சுமார் 42 இலட்சம் மாணவர்களைக் கொண்டிருக்கிறது. அவர்கள் அரசாங்க, அரச அனுசரனை பெறும் மற்றும் தனியார் பாடசாலைகளிலும் பிரிவெனாக்களிலும், விஷேட பாடசாலைகளிலும் கல்வி கற்கின்றனர். இலவசக் கல்விக்கொள்கையின் ஊடாக முற்றிலும் இலவசமாக இந்நாட்டு மாணவர்களுக்கு கல்வி பெற்றுக்கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு கல்வி கற்பிக்கவென மாத்திரம் இரண்டு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். அத்தோடு இந்த இலவசக கல்விக் கொள்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கவென வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக வருடா வருடம் பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விசால உட்கட்டமைப்பு வசதிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது இந்நாட்டின் கல்வித்துறை.
ஆரம்பக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலும் முற்றிலும் இலவசமாகவே இங்கு பெற்றுக்கொடுக்கப்படுகிறது. அத்தோடு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமும் நடைமுறையில் இருக்கின்றன.
இவ்வாறு இந்நாட்டு மாணவர்களை கல்வியின் ஊடாக முன்னிலைக்கு கொண்ட வரவென பல்வேறு திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டமும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய இத்திட்டம் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் கொவிட் 19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார வீழ்ச்சி என்பன காரணமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படாத நிலை ஏற்பட்டிருந்தது. அதேபோன்று நாட்டில் 171 பாரிய அபிவிருத்தி திட்டங்களும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
குறிப்பாக 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, நாட்டை வங்குரோத்து நிலைக்கு வித்திட்டது. அந்த சூழலில் நாட்டின் தலைமையைப் பொறுப்பெடுத்து பொருளாதார ரீதியில் நாட்டை மீளக் கட்டியெழுப்ப எவரும் முன்வராத நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் நாட்டினதும் மக்களிதும் நலன்களை முன்னிலைப்படுத்தி நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொருளாதார வேலைத்திட்டங்களை விரிவான அடிப்படையில் ஆரம்பித்தார். அவ் வேலைத்திட்டங்கள் குறுகிய காலப்பகுதி முதல் நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிக்கத் தொடங்கின. இதன் விளைவாக பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் நாட்டில் நிலவிய நெருக்கடிகளும் அசௌகரியங்களும் கட்டம் கட்டமாக நீங்கி மறுமலர்ச்சி பாதையில் நாடு பிரவேசிக்கலாயிற்று. அதன் பிரதிபலன்களும் மக்களைச் சென்றடையத் தொடங்கிவிட்டன.
இவ்வாறான சூழலில் ஏற்கனவே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள 171 திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 58 திட்டங்களை இவ்வருட நிறைவுக்குள் பூர்த்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டிருக்கிறார்.
அதேநேரம், கல்வியின் ஊடாக நாட்டில் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திடடத்தையும் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கைகைகளை மேற்கொண்டுள்ளார். அதற்கேற்ப கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று முன்தினம் முதல் இத்திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.
நாட்டின் அனைத்து மாணவர்களுக்கும் நன்மை அளிக்கும் வகையிலான காப்புறுதித் திட்டமே இது. இத்திட்டம் குறித்த உடன்படிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளர் திலக்கா ஜயசுந்தரவும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் பிரியந்த பெரேராவும் கையெழுத்திட்டுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் மாணவர் ஒருவர் ஏதாவது நோய்க்கு உள்ளானால் அவர் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தங்கியிருந்தும் வெளிநோயாளர் பிரிவுகளிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வசதி அளிக்கப்படவிருக்கிறது. இத்திட்டத்திற்கென 7212 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு மாணவர் மூன்று வருட காலப்பகுதிக்கு நன்மை பெறும் வகையில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இக்காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஏதாவது நோய்களுக்கு உள்ளாகும் மாணவர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக மூன்று இலட்சம் ரூபாவும், வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறவென இருபதினாயிரம் ரூபாவும், பாரதூர நோய்களுக்கு சிகிச்சை பெறவென 1,500,000 ரூபாவும் கொடுப்பனவாக பெற்றுக்கொடுக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விபத்து காப்புறுதி, ஆயுள் காப்புறுதி என்பனவும் மாணவர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இக்காப்புறுதி திட்டம் இந்நாட்டின் இளம்பராயத்தினருக்கு பாரிய வரப்பிரசாதமாகும். அதனால் இத்திட்டத்தின் மூலம் உச்ச பலனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக இத்திட்டம் வறிய மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாரிய நிவாரணமாகவும் ஆறுதலாகவும் அமையும். அதுவே மக்களின் அபிப்பிராயமும் ஆகும்.