பொதுஜன பெரமுன கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலின் விசேட அழைப்பின் பேரில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தர்கா நகருக்கு விஜயம் செய்கிறார்.
பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட தர்கா நகரில் பிரதான நான்கு வீதிகள் பல கோடி ரூபா செலவில் கார்ப்பட் இடப்பட்டுள்ளன. நிகழ்வில் அமைச்சர்
பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதிகளை திறந்து வைப்பார். தர்கா நகர் ஸாவியா (தெருவுப்பள்ளி) வீதி, ஸ்னாபுள்ள வீதி, ஜெம் வீதி மற்றும் காதியாவத்த வீதி ஆகியவையே கார்ப்பட் வீதிகளாக செப்பனிடப்பட்டுள்ளன.
அல்ஹாஜ் மர்ஜான் பளீல் எம்.பி.க்கான திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 15 கிலோ மீற்றர் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தில் இந்த வீதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
அத்துடன் பேருவளை சீனன்கோட்டையில் மர்ஜான் பளீல் எம்.பி.யின் நிதியில் கார்ப்பட் இடப்பட்டு வருகின்ற வீதிகளையும் அமைச்சர் பார்வையிடுவதுடன், வீதிப் பணிகளையும் அவர் ஆரம்பித்து வைப்பார்.
தனது தந்தையாரும் மேல் மாகாண சபையின் முன்னால் உறுப்பினருமான எம்.எஸ்.எம். பளீல் ஹாஜியாரின் சொந்த ஊரான தர்கா நகரில் பல வீதிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்து தருவதற்கு முன்வந்தமைக்கு தர்கா நகர் வாழ் அனைத்து மக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.