தெற்கு காசாவில் கடந்த ஜூலை 13 ஆம் திகதி நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதப் பிரிவுத் தலைவர் முஹமது தெயிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் இதனை பலஸ்தீன போராட்ட அமைப்பான ஹமாஸ் உடன் உறுதி செய்யவில்லை.
‘முஹமது தெயிப் ஒழிக்கப்பட்டுள்ளார் என்பதை எம்மால் இப்போது உறுதி செய்ய முடியும்’ என்று இஸ்ரேல் இராணுவம் நேற்று கூறியது.
தெயிபை காசாவின் ஒசாமா பின் லாடன் என்று அழைத்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட், ஹமாஸ் படை மற்றும் காசாவில் உள்ள அதன் நிர்வாகத்தை ஒழித்துக்கட்டும் செயற்பட்டில் அவரது மரணம் முக்கிய மைல்கல் என்று கூறினார்.
தெயிப் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் ஹமாஸின் வீழ்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருங்கி இருப்பதாக நிதி அமைச்சர் பெசாலல் ஸ்மொட்ரிட்ச் குறிப்பிட்டுள்ளார்.
கான் யூனிஸின் மேற்கே ‘பாதுகாப்பு வலயம்’ என்று இஸ்ரேல் அறிவித்த அல் மவாசியில் தெயிபை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்போது இஸ்ரேலிய போர் விமானங்கள் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு அலகு ஒன்றை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தின.
ஹமாஸ் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையின் நிறுவனர்களில் ஒருவரான 58 வயது தெயிப் 20 வருடங்களுக்கு மேலாக அதனை வழிநடத்தி வருகிறார்.
ஹமாஸின் சுரங்க அமைப்பு மற்றம் ஆயுதத் தயாரிப்புகளை மேம்படுத்தியவர்களில் முக்கிமானவராக கருதப்படும் தெயிப், பல தசாப்தங்களாக இஸ்ரேலினால் அதிகம் தேடப்படுபவராக இருந்து வருகிறார்.
2014 இல் இஸ்ரேலின் வான் தாக்குதல் ஒன்றில் அவரது மனைவி 7 மாதக் குழந்தை மற்றும் 3 வயது மகள் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதற்கு முன்னர் அவர் இஸ்ரேலின் ஏழு படுகொலை முயற்சிகளில் உயிர்தப்பியவர் என்று நம்பப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திட்டமிட்ட மூன்று இராணுவக் கௌன்சில் உறுப்பினர்களில் தெயிபும் ஒருவர் என்று இஸ்ரேல் நம்புகிறது.
இந்தக் குழுவில் இருந்த மற்ற இருவரில் ஒருவர் காசாவுக்கான ஹமாஸ் தலைவர் யங்யா சின்வார் கடந்த மார்ச் மாதம் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பிரதித் தலைவர் மர்வான் இஸ்ஸாவும் அடங்குகின்றனர்.