பத்திரணவுக்கு பதிலாக ஷிராஸ் இலங்கை அணிக்கு அழைப்பு: காயங்களால் நெருக்கடி
இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள நிலையில் இலங்கை வேகப்பந்து முகாம் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
வேப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண தோள்பட்டை உபாதைக்கு உள்ளாகி இருப்பதோடு டில்ஷான் மதுஷங்க தொடைப் பகுதியில் காயத்திற்கு உள்ளாகியுள்ளார். ஏற்கனவே சுகவீனம் காரணமாக துஷ்மன்த சமீர மற்றும் கட்டை விரலில் முறிவு ஏற்பட்ட நுவன் துஷார ஆகியோர் நடந்து முடிந்த இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் தொடக்கம் விளையாட முடியாத நிலையில் உள்ளனர்.
அதேபோன்று டி20 தொடரில் இடம்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோவும் சுகவீனம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் இதுவரை தேசிய அணிக்கு ஆடாத வலது கை வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷிராஸ், மதீஷ பத்திரணவுக்கு பதில் ஒருநாள் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அதேபோன்று புதுமுக வீரராக வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஏஷான் மாலிங்கவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
‘மதீஷவின் தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின்போது இதே பிரச்சினையை அவர் எதிர்கொண்டார். அவரை தேர்வு செய்து அவதானத்தை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை’ என்று அணி முகாமையாளர் மஹிந்த ஹலன்கொட குறிப்பிட்டார். பல்லேகவில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் காயத்துக்கு உள்ளான பத்திரண முன்கூட்டியே ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். அதற்கு முன் அந்தப் போட்டியில் அவர் ஒரே ஒரு பந்தையே வீசி இருந்தார். பத்திரணவுக்கு பதில் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கும் 29 வயதான மொஹமட் ஷிராஸ் தற்போது நடைபெற்றுவரும் பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியில் சோபித்த நிலையிலேயே தேசிய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார்.
கடைசியாக கடந்த செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற போட்டியில் அவர் குருநாகல் அணிக்கு எதிராக பி.ஆர்.சி. அணி சார்பில் 7 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதுவரை 47 முதல்தர ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் ஷிராஸ் 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை பதினொருவர்களில் இடம்பெறக் கூடியவர்களான மதீஷ மற்றும் மதுஷங்க அணியில் இருந்து விலகி இருக்கும் சூழலில் ஷிராஸ் இன்றைய போட்டிக்கு அழைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இலங்கை டெஸ்ட் குழாத்தில் மொஹமட் ஷிராஸ் இடம்பெற்றபோதும் அவருக்கு ஒரு போட்டியில் கூட ஆடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை
இதேவேளை இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான குழாத்தில் மேலும் மூன்று வீரர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்படி டி20 தொடரில் சோபித்த குசல் ஜனித் பெரேராவுடன் பிரமோத் மதுஷான் மற்றும் ஜெப்ரி வன்டர்சே பதில் வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரை முழுமையாக இழந்த சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணி புதிய காயங்களால் மேலும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக இலங்கை கடைசியாக ஆடிய 10 அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது.
இந்நிலையில் இந்திய ஒருநாள் குழாத்திற்கு அனுபவ வீரர்களான அணித் தலைவர் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கொஹ்லி ஆகியோர் திரும்பி உள்ளமை இலங்கைக்கு மேலும் நெருக்கடியாக உள்ளது. எனினும் சொந்த மண்ணில் ஆடும் வாய்ப்பை இலங்கை அணி சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இன்று முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.